2012 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்
18ஆம் திகதி மதிப்பீட்டு அறிக்கை மொத்த செலவினம் 2200 பில்லியன் ரூபா
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நவம்பர் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீட்டு அறிக்கை இம்மாதம் 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுமென்று அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான உத்தேச செலவினம் 2 ஆயிரத்து 220 பில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான மூலதனச் செலவாக ஆயிரத்து 111 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய றம்புக்வெல இந்தகவல்களை வெளியிட்டார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
2012ஆம் வருடத்துக்கான உத்தேச வருமானம் ஆயிரத்து 115 பில்லியன் ரூபாவாகும். வளர்ச்சி வீதத்தை 8 சதவீதமாக பேணுவதற்காக 2012ஆம் ஆண்டுக்கான அரச முதலீடு 541 பில்லியன் ரூபாவிலிருந்து 553 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின்படி வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்தத் தேசிய உற்பத்தியில் 6.2 வீதமாக மட்டுப்படுத்தப்படும். பொருளாதார அபிவிருத்தி மட்டத்தினை 8 வீதத்தில் வைத்துக்கொள்வதுடன் வருடாந்த பண வீக்கத்தினை 6 தொடக்கம் 7 சதவீதத்துக்கிடையில் பேணுவதன் மூலமே வரவுசெலவுத் திட்ட இலக்கை அடைய முடியும்.
புதிய வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்னர் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அடுத்த ஆண்டுக்கான மூலதனச் செலவு ஆயிரத்து 111 பில்லியன் ரூபாவாகவுள்ளதுடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கம் 541 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதால் முன்வைக்கப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான நியதியொதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் இம்தாதம் 18ஆம் திகதி நிதியொதுக்கீட்டு மதிப்பீட்டு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
0 comments :
Post a Comment