Sunday, October 16, 2011

தலவாக்கலை- லிந்துலை பிரதேசத்தில் உணவு விஷமடைந்து 200 பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமடைந்ததால் தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தில் 200யிற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர் தினத்தை கொண்டாடுமுகமாக அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் இன்று தலவாக்கலைப் பகுதியிலுள்ள பல பாடசாலை மாணவர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. இவ்வாறு விநியோகிக்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்னகிரி, நோர்வூட், பார்மஸ்டன், லோகி, மிடில்டன், கிரேட் வெஸ்ட்ரன் ஆகிய பகுதியிலுள்ள மாணவர்களே பாதிக்கபட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று மாலை வரை திடீர் சுகவீனமுற்ற சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக லிந்துலை வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் குறி்ப்பிட்டுள்ளார்

. சிறுவர்கள் உட்பட பலர் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லிந்துலை வைத்தியசாலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் சில சிறுவர்கள் கொட்டகலை, நுவரெலயா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, மற்றும் வட்டவளை ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜீ.குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com