கனடியத் தமிழருக்கு வந்த சோதனை! த.தே.கூ. இராப்போசனத்தில் கலந்துகொள்ள 100 டொலர்களாம்!
பிரபாரனுடன் இருந்து இராப்போசனம் உண்பதானால் அதற்காக விலைமதிப்பற்ற உயிரை சன்மானமாக வழங்கவேண்டும். இங்கு சம்பந்தன் குழுவுடன் இருந்து உண்பதற்கு 100 கனடிய டொலர்களை வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இங்கு சொல்லப்படும் கதை என்ன? பிரபாகரனுக்கு இவர்கள் நிகர் இல்லை என்று சொல்லப்படுகின்றதா? அன்றில்
தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கிக் கொடுக்கப் போகிறோம் என அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்காக, இன்று மாலை கனடா ஸ்காப்றோ எனுமிடத்தில் ஏற்பாடாகியுள்ள இராபோசன விருந்தில் விசேட விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுபந்திரன் ஆகியோருடன் இணைந்து விருந்துண்ண விரும்புகின்ற கனடியத் தமிழர்கள் நுழைவுக்கட்டணமாக 100 கனடிய டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணம் பண்ணும் கைங்கரியத்தின் கதாநாயகனாக 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு கனடா கிளை' எனப்படும் பதியப்படாத அமைப்பொன்றின் தலைவர் நக்கீரன் எனப்படுகின்ற தங்கவேலு காணப்படுகின்றார்.
தமிழர்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று அதனூடாக இலங்கையில் உயர் அந்தஸ்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்க்கை நடத்துகின்றவர்களைச் சந்திப்பதற்கு, புலம்பெயர்ந்து இயந்திரங்களாக சுழன்று உழைத்து, வேலைப்பழு தாங்க முடியாமல் வாழுகின்ற மக்கள் பணம் வழங்கும் அளவிற்கு இவர்கள் மக்களுக்கு செய்த சேவை என்ன? எனக் கேட்டபோது, எற்பாட்டாளர்களிடமிருந்தும் வரும் பதில்கள் மிகவும் நகைப்புக்குரியதாகவுள்ளன.
நாட்டிலிருந்து வருகின்ற நம்மவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இந்த இராப்போசன ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம் என இழிச்சவாயன் கணக்கில் பதில் சொல்கின்றனர்.
அதற்கு எதற்கு தமிழ் மக்களிடம் 100 டொலர்கள் வாங்குகின்றீர்கள்? எனக்கேட்டபோது,
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 2 லட்சம் கனடிய டொலர்களை வழங்கியுள்ளார்களாம், அத்துடன் அந்தப்பணத்தை எடுப்பதற்கு வேறு வழயுமில்லையாம். இவங்கள் இங்க வாற நேரம் இவங்களைக் காட்டி சனத்திட்ட புடுங்கினா தவிர வேறு வழியில்லை, காரணம் சனம் இப்ப முதல் மாதிரியில்லை என்கின்றனர்.
அதெல்லாம் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மக்களுக்கு எந்த திருப்தியும் இல்லையே எனக்கேட்டபோது,
அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இவர்களை தவிர எங்களிடம் இப்போது யார் இருக்கிறார்கள் எனக் கேட்கின்றனர் ஏற்பாட்டாளர்கள், அதுமட்டுமல்ல சம்பந்தன் சிறந்ததோர் சட்டத்தரணி எனவும் அவரது மரணத்திற்கு பின் தமிழ் மக்களுக்கு ஓர் தலைவர் இல்லை என்று அம்புலிமாகக் கதை வேறு கூறுகின்றனர்.
தமிழ் மக்களுக்கு தலைமைதுவத்தை வழங்கக்கூடிய தலைவர்கள் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாம், இதற்கு காரணம் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. காரணம் இந்தநிலை உருவாவதற்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள், தமிழ் மக்களின் தரமான தலைவர்களை புலிகள் சுட்டுக்கொன்றபோது கொலைக்காரர்களுக்கு சாமரம் வீசியவர்கள் , தற்போது அக்கொலைகளின் ஊடாக தலைவர்களான எச்சங்களை தலைவர்களாக தலையில் வைத்து ஆடுகின்றனர்.
புலிகளின் கோரத்தாண்டவ ஆட்டம் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த சகல புத்தி ஜீவிகளையும் பூண்டோடு அழித்ததோடு, கடந்த மூன்று தாசாப்தங்களில் அரசியல் எனும் பாடத்தை கற்பதும் அதன்பால் நாட்டம் செலுத்துவதும் மரணத்தையே தருவிக்கும் என்ற செய்தியை தமிழ் மக்களுக்கு சொல்லி நின்றது புலிப்பாசிசம்.
இலங்கையில் பாசிசத்தை ஏற்காத எந்த ஜீவராசியும் அரசியல் என்ற நாமத்தை உச்சரிக்க முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படித்தியிருந்ததுடன், அதன் பக்க விளைவுகள் சம்பந்தன் போன்ற பச்சோந்திகள் தலைவர்கள் ஆவதற்கு வழிசமைத்தும் கொடுத்தது.
40 மேற்பட்ட ஆண்டு அரசியல் வரலாற்றில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன?
பாசிசப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என உலகிற்கு சொன்ன ஒரே காரணத்திற்காக புலிகளின் வால்கள் சம்பந்தனின், சட்டத்தரணிப் புகழ் பேசுகின்றனர்.
ஆம், சம்பந்தன் ஓர் சட்டதரணிதான், அத்துடன் காலகாலமாக சம்பந்தன் அரசின் மீது லட்சக்கணக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்திருக்கின்றார்.
இவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதாயின், ஏன் இக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்று செல்லவில்லை? இதுவரை தமிழ் மக்கள் சார்பாக சம்பந்தன் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்திருக்கின்றார்? அதில் எத்தனை வழக்குகளை ஜெயித்திருக்கின்றார்?
தேர்தல் பிரச்சார மேடைகளிலும், ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுடனான சந்திப்பின்போதும் தமிழ் மக்கள் மீதான அவலங்கள் என அடுக்கி கொண்டு செல்லும் சம்பந்தன் அதை சட்ட ரீதியாக அணுக முற்படாமைக்கான காரணம் என்னவென்று எடுத்துக்கொள்வது?
அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்று எடுத்துக் கொள்வதா?
குற்றச்சாட்டுக்களில் நியாயம் இருப்பின் நீதிமன்று செல்லாமைக்கான காரணம் , இப்பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால்தான் தமது இருப்பு நிலைக்கும் என சம்பந்தன் தலைமையிலானோர் கருதுகின்றார்கள் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆணித்தரமாக கூறுவதா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புலம்பெயர் நாடுகளில் குடைபிடிக்கும் பினாமிகளிடம் த.தே.கூ வினர் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கின்றபோது, அவர்களால் அங்கு ஒன்றும் செய்ய முடியாதாம், அவர்கள் உயிர் அச்சுறுத்லுடன் வாழ்கின்றார்களாம் என்று பதில் வருகின்றது.
இவ்விடயத்தில் பினாமிகள் உண்மையை மறைக்கின்றார்களா? அல்லது இப்பினாமிகள் உண்மை தெரியாமல் பேசுகின்றார்களா?
இலங்கையில் சாதாரண தமிழ் மக்களை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறந்த பாதுகாப்புடன் உள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் 2 தொடக்கம் 4 நன்கு பயிற்சி பெற்ற மெய்பாதுகாவலர்களுடன் வலம் வருகின்றனர்.
இவற்றுக்கும் அப்பால் சம்பந்தன் இன்றும் சந்திரிகா அம்மையாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்திலேயே பவனி வருகின்றார். அத்துடன் மாவையும் அமெரிக்க தூதரகத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சொகுசு வாகனத்தில் வலம் வருகின்றார் என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் புலிவால் ஊடகங்கள் அவர்களை இன்னும் இருட்டில் அடைத்தே வைத்துள்ளது. .
இவ்விடத்தில் சம்பவம் ஒன்றை நான் நினைவு படுத்தவேண்டும், ஒரு நாள் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் மக்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது. அன்று திடீரென பாராளுமன்ற உறுப்பினரின் மெய்பாதுகாவலர்களில் ஒருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுவிட்டது. சக மெய்பாதுகாவலர்கள் அவரை விட்டுவிட்டு நாம் போவோம் ஐயா என பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். ஆனால் நம்ம ஐயாவுக்கு வாந்திபேதி ஆரம்பித்துவிட்டது. நான்கு பாதுகாவலர் இல்லாமல் மக்கள் முன்செல்ல அவ்வளவு பயம். வயிற்றுக்கோளாறு என போன்பண்ணிச் சொல்லி நிகழ்வை ரத்துச் செய்து கொண்டார்.
மேற்படி விடயத்தில் இருந்து என்ன விளங்குகின்றது? தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் காணப்படும் பயம் தமிழ் மக்களைச் சந்திக்கவே. காரணம் இவர்கள் இதுவரை காலமும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
எது எவ்வாறாயினும் மக்கள் அவர்களுக்குத்தானே வாக்களிக்கின்றார்கள் என்ற நியாயமான கேள்வி எழலாம்.
தமிழ் மக்கள் தமிழ் உணர்வு ஊட்டப்பட்டுள்ளார்கள், தழிழர் அல்லாத தமிழ்த் தேசியம் பேசாத ஒருவருக்கு வாக்களிப்பது துரோகம் எனக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாயையில் சிக்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியத்தின் பெயரால் வாக்களிக்கின்றனர். அதற்காக சம்பந்தனும் , மாவையும் , மண்டையன் குழுவின் தலைவராக சுரேஸ் பிறேமச்சந்திரனும் மக்களுக்கு செய்த சேவைக்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனக் கருதுவது மடமையாகும்.
காட்டு மிராண்டி பாசிட்டுக்களான புலிகளை தேரில் வைத்து இழுத்த ஒரு மந்தைக் கூட்டம் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பச்சோந்தி கூட்டத்தை அந்த தேரில் ஏற்றி இழுக்க ஆரம்பித்துள்ளது. அதற்காக கனடா , லண்டன் ஆகிய நாடுகளில் கிளைகளையும் அமைத்துள்ளது. இக்கிளைகளைக் காட்டி அரசியல் செயல்பாடுகளுக்கென மக்களிடம் பணம் வசூலிப்பதே இவர்களது நோக்கம். அதன் முதற்படியாகவே தற்போது சம்பந்தன் கும்பலுடன் இருந்து உணவு உண்பதற்கு பணம் கோருகின்றனர்.
பிரபாரனுடன் இருந்து இராப்போசனம் உண்பதானால் அதற்காக விலைமதிப்பற்ற உயிரை சன்மானமாக வழங்கவேண்டும். இங்கு சம்பந்தன் குழுவுடன் இருந்து உண்பதற்கு 100 கனடிய டொலர்களை வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இங்கு சொல்லப்படும் கதை என்ன? பிரபாகரனுக்கு இவர்கள் நிகர் இல்லை என்று சொல்லப்படுகின்றதா? அன்றில் பிரபாகரன் போன்று இவர்கள் கொடூரமானவர்கள் அல்லர் இவர்கள் வயிற்றுப்பிளைப்புக்காக அரசியல் செய்பவர்கள், இவர்களின் பெறுமதியே 100 கனடிய டொலர்கள் தான் எனக் கொள்வதா?
1 comments :
இங்குள்ள புலிபினாமி நரிக்கூட்டம் தமிழ் மக்களை இன்றும் மந்தைகளாகவே பார்கின்றது என்பதே உண்மை.
நேர்மை, நீதி, நியாயம் என்பது அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இல்லை. எனவே இதுகள் திருந்த இடம் உண்டா?
மூதேவிகள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை.
Post a Comment