Thursday, September 8, 2011

தமிழ் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட தமிழ் கைதிகளுக்கு உதவிய சிங்கள அரசியல்வாதி

கிழக்கிலங்கையில் மர்ம மனிதன் விவகாரம் ஆரம்பமானபோது அம்பாறையிலுள்ள வளத்தாப்பிட்டி என்னுமிடத்தில் பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டது. இத்தாக்குதல் சம்பந்தமாக வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 9 பேர் 27.08.2011 சம்மாந்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவ் இளைஞர்கள் 29.08.2011 திங்கட்கிழமை கல்முனை நீதிமன்றில் நீதவான் ஆனந்தி கனகசபை முன்னர் ஆஜர்படுத்தப்பட்டபோது 2ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பொலிஸாரை அன்றையதினம் சாட்சிகளையும் விசாரணை அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார்.

எனினும் 2ம் திகதி வெள்ளிக்கிழமை மன்றில் ஆஜராகிய பொலிஸசார் விசாரணைகள் நிறைவு பெறவில்லை என கால அவகாசம் கோரியபோது அவர்களுக்கான அவகாசம் இன்று 07.09.2011 வரை வழங்கப்பட்டது.

நேற்று சாட்சிகளும் விசாரணை அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நேற்று நீதிமன்றில் இடம்பெற்றதுடன் நால்வர் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியோர் என அடையாளம் காட்டப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி எஸ்எம் முஸ்தபா தனது கட்சிக்காரர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிவான் அனைவரையும் பிணையில் விடுதலை செய்தார்.

மேற்படி சட்டத்தரணிக்கான கொடுப்பனவுகள் யாவும் அம்பாறையைச் சேர்ந்த சிங்கள அரசியல்வாதி ஒருவரே வழங்கியதாக பிணையில் விடுதலை செய்யபட்பட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

இச்சம்பவம் இடம்பெற்ற முதல்நாள் சம்மாந்துறை பிரதேசத்தில் மர்ம மனிதன் பீதி ஏற்பட்டபோது சம்மாந்துறை வாசிகள் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து கல் பொல் தடிகளால் வீசினர். இதுதொடர்பாக 5 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டபோது மறுநாள் பொலிஸ் நிலையம் சென்ற பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் பிரதேச அரசியல்வாதிகளும் அவர்களை பொலிஸ் நிலையத்திலிருந்தே மீட்டுவந்த சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் வாக்குகளை வாங்குவதற்கு மாத்திரமே மக்கள் முன்செல்கின்றனர் என்பதும் இவ்வாறான சந்தர்பங்களில் அரசியல்வாதிகளோ சமூகத்தில் உள்ள பெரியோரோ மக்களுக்கு உதவுவது இல்லை என்பது மிகவும் வேதனை தருகின்ற விடயமாகும் .

No comments:

Post a Comment