Wednesday, September 21, 2011

பாராளுமன்றில் இன்று

கே.பி யிடம் மீட்கப்பட்ட சொத்துக்கள் எங்கே மீண்டும் கேள்வி எழுப்புகிறது ஜேவிபி

அரசாங்கத்தின் நிதிப் புலனாவுத் துறை உண்மைத் தன்மையுடன் செயற்படுமேயானால் கே.பி. யினூடாக திரட்டப்பட்ட புலிகளின் சொத்து விபரங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம். பி சுனில் ஹந்துன்னெத்தி இன்று சபையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

கே. பி. அலரி மாளிகையில் இருக்கின்றாரா அல்லது விசும்பாயவில் இருக்கின்றாரா இல்லா விட்டால் எந்த நரகத்தில் இருக்கின்றார் என்பது எமக்குத் தேவையில்ல. அவரிடமிருந்து மீட்கப்பட்ட மூன்று கப்பல்களுக்கும் 16 வங்கிக் கணக்குகளுக்கும் என்ன நடந்தது என்பதுதான் எமது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிதித் தொழில் சட்ட மூலம் பணம் தூதாக்கல் தடை திருத்தச் சட்ட மூலம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்ட மூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கே. பி. என்றழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனிடம் 600 வங்கிக் கணகுக்கள் இருப்பதாகவும் 15 கப்பல்கள் இருப்பதாகவும் அரசாங்கம் கூறியது. இதற்கான ஹன்சாட் அறிக்கையும் உள்ளது. இந்நிலையில் புலிகளுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை கைப்பற்றியிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதான நிதிப் புலனாவுப் பிரிவும் தற்போது இயங்கி வருவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் கே. பியிடமிருந்து கைப்பற்றப்பட்ட 600 வங்கிக் கணக்குகளும் இலங்கையின் எந்த வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற மூன்று கப்பல்களுக்கு என்ன நடந்தது. அது இருப்புக்காக விற்பனை செயப்பட்டு விட்டதா என்பதை இந்த நிதிப் புலனாவுத் துறை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

புலிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் எவ்வளவு என்பதை அறிய மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். நிதிப் புலனாவுத்துறை உண்மைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றதென்றால் மேற்படி தகவலை வெளியிட வேண்டும். இதனூடாகவே இங்கு கொண்டு வரப்படுகின்ற நிதி சம்பந்தமான சட்டங்கள் உயிரோட்டம் பெறுபவையாக அமையும் என்றார்.

இரட்டைகோபுர தாக்குதலை அடுத்தே வல்லரசுகள் உணர்ந்தன.அமைச்சர் ஹக்கீம்
பயங்கரவாதிகள் நிதித் திரட்டுவதன் ஆபத்தை இரட்டை கோபுரம் மீதான தாக்குதல்களை அடுத்தே வல்லரசுகள் உணர்ந்துக் கொண்டன என்பதுடன் பல்வேறு நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவிய (திருத்தம்) சட்ட மூலத்தின் ஊடாக பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதை தடுக்கலாம் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாராளுமன்ற பொது சபைக்கு குழுவின் மூலம் பெறுமதி சேர்வரி மோசடிகள் இடம்பெற்றுள்ளமையை கண்டுப்பிடித்தோம், குற்றவாளிகளுக்கு தண்டனை மீதான சட்டத்தின் கீழே தண்டனை வழங்க முடிந்தது என்பதுடன் பணத்தை மீளப்பெற்று உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சட்டங்களுடன் பரிந்துரைகளை மேற்கொண்டு குற்றவியல் பரஸ்பர உதவி சட்டமூலத்தை அமைச்சு விரைவில் தயாரிக்கப்படவிருக்கின்றது. இதன் மூலமாக பயங்கரவாதிகளுக்கு நிதி வளங்குவதும் அதன் வழிமுறைகளையும் தடுக்க முடியும்.


டிசம்பர் 31 க்குள் சகலரும் மீள் குடியேற்றப்படுவர் சபையில் அமைச்சர் குணரட்ன வீரகோன்

யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களில் இன்றும் 7427 பேர் மீள் குடியேற்றத்திற்காக எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று தெரிவித்த மீஷள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க எம்.பியான ரவி கருணாநாயக்க எம்.பி உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அவர்களை மீள்குடியேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கேட்டிருந்தார்.

இதற்குப் பதிஷளித்த அமைச்சர் குணரட்ன வீரகோன் மேலும் கூறுகையில்,

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் தற்போது வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் 3324 பேரும் ஆனந்த குமார சுவாமி முகாமில் 4103 பேரும் என மொத்தமாக 7427 பேர் மீள்குடியேற்றப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.

கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலேயே இந்த மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றி மீள்குடியேற்ற முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் டிசம்பவர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இவர்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மேற்படி இரண்டு முகாம்களிலும்
ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட 1002 பேரும்
5 - 10 வயதுக்குட்பட்டோரில் 1165 பேரும்
10 - 18 வயதுக்குட்பட்டோரில் 1528 பேரும்
18 - 35 வயதுக்குட்பட்டோரில் 1632 பேரும்
35 - 52 வயதுக்குட்பட்டோரில் 1662 பேரும்
60 வயதுக்கு மேற்பட்டோராக 438 பேரும் என்ற வகையில் இந்த இரண்டு முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

சட்டமூலத்தை தமிழ் கூட்டமைப்பு எதிர்த்தது அமைச்சர் சுடப்பட்டார்

புலிகள் நிதி சேகரிப்புக்கு இடையூறாக இருக்கும் என்பதனால் தான் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்ட மூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று எதிர்த்தது. எனினும் அந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்தமையினால் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சுடப்பட்டார் என்று சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயத்தை சமர்ப்பித்த வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அவைக்கு நடுவே இருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். புலிகளுக்கு நிதியை சேகரிக்க முடியாது என்பதனால் தான் கூட்டமைப்பினர் இவ்வாறு செய்தனர்.

எனினும் இந்த சட்டமூலத்தை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் சமர்பித்து சபையில் நிறைவேற்றினார். இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு நான்கு வார காலத்திற்குள் அவர் சுட்டுக் கொலலப்பட்டார். இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமையினால் தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிதி சமவாயத்தில் நாம் 12 நாடுகளுடன் கையொப்பமிட்டுள்ளோம் என்பதுடன் நிதி புலனாய்வு பிரிவு 2006ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது திணைக்களமாக மாற்றப்பட்டது. பயங்கரவாதிகள் பணத்தை திரட்டியமையினால் தான் அவர்களால் ஜனநாயகத்திற்குள் பிரவேசிக்க முடியாது போனது எனலாம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே நிதித்தொழில், பணம் தூயத்தாக்கல் (திருத்தம்), பயங்கர வாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்) இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment