உங்கட வீட்டில பிரச்சினை என்றால் எங்கட வீட்டில் இடமுண்டு என்கிறார் நிமால் சிறிபால
ஜேவிபி யினுள் உட்கட்சி மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் கட்சியிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியிலும் இடங்கள் உண்டு எனவும் அவர்கள் எந்த நேரத்திலும் வந்து இணைந்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் அரசியலில் முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கம் எனவும் அதற்காக எவரும் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டியதில்லை எனவும் கூறிய அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி யினுள் நிலவும் பிரச்சினைகளிலிருந்து வெளியேற விரும்புவோர் தமது கட்சியில் இணைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கட்சிக்குள் எந்தவித கருத்து முரண்பாடும் இல்லை என்றும் கட்சியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிக்குள் இணைந்துள்ளதாகவும் ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) க்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கட்சிக்குள் எதிர்காலத்தில் பிளவு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவு காணப்படுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
கட்சியில் கடந்த காலங்களில் எடுத்த கூட்டமைப்பு சம்பந்தமான நடவடிக்கை யினாலே சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழு ஆலோசித்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று கட்சியின் உறுப்பினர் ராமலிங்கம் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படவுள்ள கலந்துரையாடல்களையடுத்து எதிர்காலத்தில் கட்சியிலுள்ள பதவிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment