அமைச்சராக வந்ததாலேயே டக்ளஸை கைது செய்யவில்லை. மத்திய அரசு பதில்
சென்னையில் ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினராக தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா , சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார் என 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு தப்பிஓடிவந்தார். தொடர்ந்து வழக்கு இந்தியாவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டெல்லிக்கு அரசு விருந்தினராக சென்றபோது டக்ளஸை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கடந்த மாதம் 5ஆம் திகதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றின் கேள்விக்கு மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இலங்கை அமைச்சராக இந்தியாவந்தபோது அந்தஸ்து கருதி டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையே கைதி பரிமாற்ற ஒப்பந்தம் ஏதும் இல்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா, தனக்கு எதிரான கைது ஆணை உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரியும், பிணை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து, டக்ளஸுக்கு பிணை வழங்க மறுத்துவிட்டதோடு, உயர் நீதிமன்றத்தில் சரணடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர் சரண் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment