Sunday, September 18, 2011

இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து இன்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் அளவு 6.8 ரிக்டராக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கி்ம் மாநிலம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியுள்ளது. உயிரிழப்பு குறித்தோ, பிற சேதம் குறித்தோ விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இன்று மாலை 6.11 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

தரைக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட, கிழக்கு இந்தியாவில் நில அதிர்வுகள்

இதேபோல வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர்.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில்தான் நிலஅதிர்வு அதிக அளவில் உணரப்ட்டது. சமீபத்தில்தான் டெல்லியை நிலநடுக்கம் தாக்கியது. அப்போது 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது என்பது நினைவிருக்கலாம்.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

சிக்கிமை மையமாகக் கொண்ட இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

நேபாளம், பூடானிலும் நில அதிர்வு
வட இந்தியாவை உலுக்கிய இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகள் பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்கும் பீதி ஏற்பட்டுள்ளது.

பலி எவ்வளவு: நிலநடுக்கத்தினால் சிக்கிமில் -4, பீகாரில் -1, மேற்கு வங்கத்தில் -1 உட்பட ஆறு பேரும், அண்டை நாடான நேபாளத்தில் ஐந்து பேரும் பலியாகியுள்ளனர்; 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

வெளிநாட்டினர் மீட்டு: சிக்கிம் மாநிலம் வடக்கு பகுதியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 15 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 150 கிராம மக்களை இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கேங்டாக் அருகில் உள்ள மாங்கன் பகுதியில் அமைந்துள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிக்கிமின் பிகாங் பகுதியில் 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300 எல்லைப்பாதுகாப்பு படையினர் சிலிகுரி மற்றும் கவுகாத்தி பகுதிகளில் மருத்துவர்களுடன் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு உதவி: நிலநடுக்கம்ஏற்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங், சிக்கிம் மாநில முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். பின்னர் பேரிடர் மேலாண் அமைப்பு கூட்டத்தை உடனடியாக கூட பிரதமர் கேபினட் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கூட்டம் கூடி அவசர ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கேபினட் செயலாளர் அஜித் சேத் கூறுகையில், சிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு விமானப்படை விமானத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோல்கட்டாவுக்கு 5 குழுவினர் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும் நிவாரண பணிகளில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் தற்போது நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

உதவி செய்ய தயார்-நரேந்திர மோடி: நிலநடுக்கம் ஏற்பட்ட தகவலறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி கவலையடைய செய்தது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய குஜராத் மாநிலம் தயாராக உள்ளது. இதற்காக குஜராத் பேரிடர் மேலாண் அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக மீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறினார்.

20 ஆண்டுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம்: தற்போது ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த பகுதி நிலநடுக்கம் அபாயம் அதிகரித்து வருவதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment