அரசும் த.தே.கூ ம் என்ன பேசுகின்றது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது. அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள், கருத்துகள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும். தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஈ.பி.ஆர். எல். எப். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன்
இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை வருமாறு
கிறீஸ் பூத பீதி நிலை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பீதியூட்டம் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டவண்ணமே உள்ளன. இதைப்பற்றி தமிழ் முஸ்லீம் அரசியற்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பரவலாக குரலெழுப்பியும் இந்தப் பீதியூட்டும் சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.
இதற்கிடையே அனுராதபுரத்தில் முஸ்லீம்களின் தர்கா மீது நடத்தப்பட்டத் தாக்குதல் மத நம்பிக்கைகள் மீதான அச்சுறுத்தல் என்பன தொடரச் செய்கின்றன. மிருகங்களை பலியிடுவது தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய மூத்த அரசில் தலைவரான அலவி மௌலானவையே சினமூட்டியுள்ளது.
இத்தகைய குணங்குறிகள் இன முரண்பாடுகளை மோசமடையச் செய்து விரும்பத்தகாத நிகழ்வுகளை நோக்கி இட்டுச்செல்லலாம். இத்தகைய போக்குகள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும். இதற்கெதிராக அரசு இதயசுத்தியுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கிடையே அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன. ஆனால் என்ன பேசப்படுகிறது என்பதை இரு தரப்பும் வெளிப்படுத்துவதாயில்லை. முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் அவ்வாறுதான் மக்களுக்கு தெரியாத நிலை இருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது, அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள் கருத்துக்கள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும்.தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே யோசனைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது தலைமைத்துவங்களின் கடமைப்பாடாகும்.
தி. ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
0 comments :
Post a Comment