Tuesday, September 6, 2011

செருப்பு வாங்க தனி விமானம் அனுப்பிய மாயாவதி : விக்கிலீக்ஸ் அம்பலம்

புதுடெல்லி : உ.பி. முதல்வர் மாயாவதி செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு ஜெட் விமானத்தை அனுப்பி வைத்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்கள் அந்நாட்டுக்கு அனுப்பிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. உலக தலைவர்களை பற்றி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியாகி வருகின்றன. 2007 முதல் 2009ம் ஆண்டு வரையிலான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில் உ.பி. முதல்வர் மாயாவதி பற்றி கூறியிருப்பதாவது: மாயாவதி மிகவும் அகம்பாவமும் கர்வமும் மிக்கவர். பிரதமர் பதவி மீது அவர் கண் வைத்துள்ளார். தனது துதிபாடிகள், கட்சியினர், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடுகிறார். பொதுக்கூட்டங்களில் அவருக்கு ஸி1000 நோட்டுக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது.

ஆடம்பர செலவுகள், தனக்குதானே பொது இடங்களில் சிலை வைத்துக் கொள்வது போன்றவற்றுக்காக அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகிறார். ஒரு முறை தனக்கு பிடித்தமான செருப்புகள் வாங்கி வருவதற்காக உ.பி.யில் இருந்து மும்பைக்கு தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தை இதற்காகவே மும்பைக்கு அனுப்பி செருப்பை கொண்டுவர செய்தார்.

மேலும், தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. உணவில் விஷம் கலந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தனக்கு கொடுக்கப்படும் உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்வதற்காகவே சம்பளத்துக்கு ஆட்களை வைத்துள்ளார். இந்த தகவல்கள் 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

அமைச்சரை தோப்புகரணம் போட வைத்து தண்டனை

அமைச்சர்கள் உட்பட அனைவரும் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று விரும்புபவர் மாயாவதி. அமைச்சர்களை அவர்கள் தகுதிக்கேற்ப மாயாவதி நடத்துவதில்லை. சிறிய தவறுகள் செய்தாலும் கடுமையாக தண்டிப்பார். அந்த தண்டனை சிறு குழந்தைகளுக்கு பள்ளியில் கொடுக்கப்படும் தண்டனை போன்றது. ஒரு முறை சிறு தவறு செய்ததற்காக அமைச்சர் ஒருவரை தன் முன்னிலையில் தோப்புக்கரணம் போட வைத்து தண்டித்துள்ளார். அமைச்சரும் அழுது கொண்டே தோப்புக்கரணம் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com