கணவன் இருக்கும் சிறைக்குள் நுழைந்ததும் கண்ணீர் விட்டு கதறிய நளினி!
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தனது கணவன் முருகன் இருக்கும் வேலூர் சிறைக்குள் நுழைந்ததும் நளினி கண்ணீர் விட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் நளினியின் தண்டனை, அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடைய பரிந்துரையின் பேரில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நளினி. சில மாதங்களுக்கு முன்பு அவர் பாதுகாப்பு கருதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் முருகன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களைத் தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தனது கணவரை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். இதனை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து அரசின் கருத்தை சிறை அதிகாரிகள் கோரியிருந்தனர். அரசும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து நேற்று புழல் சிறையில் இருந்து நளினி வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். காலை 8 மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகளிர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
வேலூர் சிறைக்குள் நுழைந்ததும் நளினி கண்ணீர் விட்டு கதறினார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் சிறை அதிகாரிகள் தன்னை உணவில் விஷம் கலந்து கொல்லப் பார்ப்பதாகவும், மற்ற பெண் கைதிகளை தன்னுடன் பேச அனுமதிப்பதில்லை என்றும் நளினி புகார் தெரிவித்தார். இதையடுத்து சிறை அதிகாரிகள் நளினியின் அறையை சோதனை செய்ததில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நளினியை வேலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றினார்கள்.
0 comments :
Post a Comment