ஒன்றும் செய்ய முடியாத நிலையிலேயே புலிகளுடன் இணைந்தாக கூறுகின்றார் செல்வம்.
ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்தவாரம் பிரான்சில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது தாங்கள் ஒன்றுமே செய்ய இயலாத காலகட்டத்திலேயே புலிகளுடன் இணைந்து கொண்டதாகவும் தற்போது தாம் அந்த நிலைப்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் ஐரோப்பாவிலுள்ள அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை சந்தித்துப் பேசியபோது ரெலோ புலிகளுடன் இணைந்து கொண்டதற்கான விளக்கம் முன்னாள் உறுப்பினர்களால் கேட்கப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், தாம் எதிர்காலத்தில் புலிகளின் எச்ச சொச்சங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் சிவாஜிலிங்கம் அவ்வாறு செயற்பட்டுவருவதாகவும் அதன்காரணமாக அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் லண்டன் , பிரான்ஸ் , ஜேர்மனி ஆகிய நாடுகளில் வசிக்கும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். லண்டனிலிருந்து சுதன் , சம்மந்தன் , ஜனா , இளங்கோ , சாம் உட்பட 14 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தாம் இணைந்திருந்தாலும் அங்கு தமக்கு ஏதுவான சூழ் நிலை இல்லை எனவும் தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ரெலோ பலப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக விளக்கியப் பேசிய செல்வம் கொழும்பில் ரெலோவின் தலைமைக் காரியாலயத்தை அமைக்க வேண்டுமெனவும் அதற்கு அங்கு கலந்து கொண்டிருந்தவர்களிடம் நிதி உதவியையும் நாடியுள்ளார்.
செல்வத்தின் வேண்டுதலை ஏற்று முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான ஜனா எனப்படுகின்ற கருணாகரன் பத்தாயிரம் பிரித்தானிய பவுண்ட்டுகளை வழங்க முன்வந்தாக அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததுடன், இவர் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இத்தனை முயற்சிகளும் மேற்கொள்வதாக ரெலோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் வாங்கித்தரப்போகின்றோம் என புறப்பட்ட தமிழ் அமைப்புக்கள் இந்தியாவுடன் இணைந்து மக்களுக்கு செய்த துரோகங்கள், கொலைகள், கொள்ளைகள் யாவும் அம்பலமாகியுள்ள நிலையில் அடுத்த அழிவுக்கான அடித்தளம் ஆரம்பமாகின்றது என ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment