Thursday, September 29, 2011

ரமேஸின் மனைவிமீது வரும் போர்குற்ற வழக்குகளை உருத்திரகுமாரும் இமானுவலும் எதிர்கொள்வார்களா?

புலிகளின் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த ரமேஸ் என்பவரின் மனைவி வத்சலாதேவி தனது கணவன் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்டுள்ளாரெனவும், கணவனின் இழப்புக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றொன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி இன்று பரவலாக பேசப்படுகின்ற விடயமாக அல்லது பரப்பப்படுகின்ற விடயமாகவுள்ளது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இது நியாயம்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு என எவரும் கருதுவார்களானால் அவர்களின் அறியாமைக்கு ஈடுகிடையாது என்றே கூறலாம்.

வழக்காளி வத்சலாதேவி யை வைத்து குற்றஞ்சுமத்தப்படுகின்ற இலங்கை அரசின் முக்கியபுள்ளிகளை இரு பிரிவுகளாக பிரித்து ஒரே நீதிமன்றில் இருவழக்குளை தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் இருவேறு ஸ்தாபனங்கள் உரிமைகோருகின்றது. ஒன்று ருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசு, இரண்டாவது இமானுவேல் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை.

ஒரே நீதிமன்றில், ஒரே வழக்காளியின் பெயரால் சாவேந்திர சில்வாவிற்கு வேறாகவும், மஹிந்தவிற்கு வேறாகவும் வழக்கு தாக்கல் செய்து இவ்வழக்கினை தாமே தாக்கல் செய்துள்ளோம் என மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கு செலவு செய்த நேரத்தையும் பணத்தையும்விட பன்மடங்கு மேலதிகமாக செலவு செய்வதை பார்கின்றபோது நோக்கத்தை விளங்கமுடிகின்றது?

மேலும் நோக்கம் என்ன என்பதை மக்கள் விளங்கிக்கொள்வதற்கு முன்னரே தாமாகவே முன்வந்து அதையும் வெளிப்படையாக சொல்லி விட்டனர். நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம் இதன் மூலம் மஹிந்த அரசாங்கத்தை சிக்கலில் மாட்டப்போகின்றோம். அதற்கு நிதிப்பற்றாக் குறையாகவுள்ளது. எனவே மக்கள் தாராளமாக உதவி செய்யவேண்டுமாம்.

என்ன ஒற்றுமை.. ஓரேவழக்கை கச்சிதமாக பிரித்து ஒரே வழக்காளியை வைத்து இரு ஸ்தாபனங்கள் வழக்காடுகின்றன. இருவரும் போட்டிபோட்டு மக்களிடம் பணம்கேட்கின்றனர். மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயத்தில் தங்களுக்குள்ள முரண்பாடுகளை மறந்த ஏகோபித்த உடன்பாடா? அன்றில் வசுந்தலாதேவியை தேரேற்றி இழுப்பதில் செய்துகொண்ட தற்காலிக உடன்படிக்கையா என்பதெல்லாம் காலம்கனியும்போது கறுப்பு வந்து மக்களுக்கு சொல்லும்.

வழக்குக்கு செலவளிக்க மக்கள் வந்து நிதி உதவி செய்யவேண்டுமென கூறுகின்றனர். என்னதான் அவ்வளவு செலவு? வக்கீல்களுக்கு மில்லியன் கணக்கிலா கொடுக்கப்போகின்றனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால் இவ்வழக்கை பதிவு செய்துள்ள சட்டத்தரணி, ஒரு பல்கலைக்கழகம் சார்பாக உலகில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனது மாணவர்கள் ஊடாக ஆய்வொன்றினை மேற்கொண்டுவருவதாகவும் அதன் அடிப்படையில் சனல் 4 என்கின்ற தொலைக்காட்சியில் வெளியான காட்சிகளை சாட்சியங்களாக வைத்து பரிட்சாத்தத்திற்கு இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளதாகவும் பேசப்படுகின்றது.

இந்தப்பரிட்சாத்தத்திற்கு தமிழ் மக்கள் வேறு பணம் வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இவர்களிடம் முடங்கியுள்ள பணம் எதற்காக வைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மக்கள் அவதியுறும்போது புலம்பெயர் தேசம் எங்கும் புலிகளிடம் வசூலித்த பணத்தினை அம்மக்களுக்காக செலவிடுங்கள் என்றபோது, இலங்கை அரசாங்கம் அங்கு சென்று வேலை செய்ய எங்களை அனுமதிக்கின்றது இல்லை, அவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது அதனை செய்வோம் என்றார்கள். தற்போது அமெரிக்காவில் வழக்கு போடுவதற்கும், அமெரிக்க அரசாங்கம் புலிகளின் இருப்பிலுள்ள பணம்வேண்டாம், புதிதாக மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டுவாருங்கள் என நிபந்தனை விதித்து விட்டார்கள் போலும்.

தமிழ் மக்களை முடிந்த வழிகளிலெல்லாம் ஏமாற்றும் இமானுவேல் , உருத்ரகுமாரின் சில்மிசங்களுக்காக பங்;குபோடப்பட்டுள்ள வத்சலாதேவி யார்? திருமலை மாவட்டம மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இவரும் மண்மீட்கச் சென்ற புலிகளின் தளபதியான தனது கணவனை வைத்து வன்னி திருமலை மட்டக்களப்பு என பல இடங்களிலும் மண்சேர்த்தவர் எனவும் பணம் பண்ணுவதில் வல்லவர் எனவும் ரமேஸின் முன்னாள் மெய்பாதுகாவலர்கள் ஊடாகா அறியமுடிகின்றது.

அக்கா வன்னியில் இருக்கும்போதே சும்மா இருக்க மாட்டா எனவும் சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களில் இல்லாத எழைகளின் காணித்துண்டுகளை கபராது செய்வதையே முழு நேரப்பணியாக கொண்டிருந்தாகவும் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மட்டக்களப்பு பிரதேசத்தில் ரமேஸின் சகோதரர்களின் பெயரிலும், திருமலை மற்றும் வன்னியில் சகுந்தலாதேவியின் சகோதரியான தாதி ஒருவரின் பெயரிலும் காணிகள் வாங்கி குவிக்கப்பட்டு, அளவுக்கு மீறிய சொத்து சேகரித்தமைக்காக கருணாவால் எச்சரிக்கப்பட்டதும், அதற்கு பழிவாங்கலாக கருணா பிரிந்தவுடன் நடாத்தப்பட்ட விடயங்கள் பலவும் சுவாரசியமானவை. ஆனால் இவ்விடயங்களை பிறிதொரு இடத்தில் பார்ப்போம்.

1985ம் ஆண்டு மட்டக்களப்பில் புலிகளியக்கத்தில் இணைந்து கொண்ட சகுந்தலாதேவி 1990 ஆண்டிலிருந்து வடபிரதேசங்களில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 1999ம் ஆண்டு கருணாவின் மனைவியின் ஏற்பாட்டில் ரமேஸை திருமணம் செய்து கொண்ட இவர், அதுவரைகாலமும் புலிகளின் அன்பரசி படையணியில் இருந்துள்ளார். இவரது இயக்கப்பெயர் சுனேத்திராவாகும்.

வன்னியில் போர் ஆரம்பமாகமுதலே அங்கிருந்து நழுவி திருமலை வந்துள்ளார். இவர் திருமலை வந்துள்ள செய்தியை அறிந்த ராபர்ட், ஜிம்கெலித்தாத்தா போன்றோரின் மனைவியரான விதவைப் பெண்கள் இவரைதேடி படையெடுக்க தொடங்கியவுடன் தலைமறைவாகியுள்ளார்.

புலிகளியக்கத்திலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து அங்கு நிகழ்த்தப்பட்ட சகோதரப்படுகொலைகளை ரமேஸே முன்நின்று நடாத்தியவராவார். கருணாவுடன் பிரிந்து சென்று பின்னர் புலிகளுடன் இணைந்து கொண்ட ராபர்ட், ஜிம்கெலித்தாத்தா, விசு, திருமால், துரை, எஸ்பி உட்பட 25க்கு மேற்பட்ட புலிகளின் முன்னணித் தளபதிகளாக இருந்தவர்களை ரமேஸ் தனது கையாலேயே சுட்டுக்கொன்று தரவைக் காட்டுப்பகுதியில் புதைத்தார் என மேற்குறிப்பிட்ட இளம் விதவைப் பெண்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இப்படுபாதக கொலைகளில் சுனேத்திராவின் பங்கு மிக முக்கியமானது எனவும் இவரால் சுடப்பட்டவர்களின் மனைவிகளான இளம் விதவைப் பெண்கள் தெரிவிக்கின்றனர். தமது கணவன்மார் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தபோது ரமேஸின் மனைவி பல தடவைகளில் தமது கணவன்மாரை தொடர்பு கொண்டு நீங்கள் வாருங்கள் எனது கணவர் சகலவற்றையும் பாத்துக்கொள்வார். அவர் உங்கள் விடயமாக தலைமையுடன் பேசியுள்ளார். உங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ஆசைவார்த்தை கூறி அழைத்து தனது கணவனின் கொலைவெறிக்கு ஆளாக்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் ரமேஸ் புரிந்த இன்னுமொரு தமிழின அழிப்பு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். 1989 ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வாபஸ்பெற்றுச் சென்றபோது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எப் என்கின்ற அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தியா விற்கு தப்பி ஓடினர். ஆனால் அவர்களால் பலாத்காரமாக அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட இளைஞர்களும் கீழ் நிலை உறுப்பினர்களும் நடுத்தெருவில் விடப்பட்டனர். அவர்கள் புலிகளிடம் சரணடைந்தார்கள். சரணடைந்த அவர்களை புலிகள் தமது கறடியனாறு முகாமில் வாராந்தம் வந்து கையொப்பமிடவேண்டுமென நிபந்தனை விதித்திருந்தனர். இவ்வாறு கையொப்பமிட வந்தவர்களை ஒருநாள் டிப்பர் ஒன்றில் ஏற்றிய ரமேஸ் கறுப்புபாலம் பகுதிக்கு கொண்டுசென்று அவர்கள் கையாலேயே பெரிய கிடங்கு ஒன்றை தோண்டவைத்து சுமார் 75 இளைஞர்களை அதே கிடங்கில் இறங்கச்சொல்லி சுட்டுத்தள்ளினார்.

இவ்வாறு தமிழ் மக்களின் இரத்தம்குடித்த கயவன் உயிர்பிச்சை கேட்டு அழுவதை வீடியோக்களில் பார்த்த பாதிக்கப்பட்ட மக்கள் மட்டற்ற மகிழ்சி அடைந்தனர். அத்துடன் ரமேஸ் புரிந்த கொலைகளுக்கு துணையாக நின்ற சுனேத்திரா என்கின்ற வத்சலாதேவி மீது பாதிக்கப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அது தொடர்பான விபரங்கள் யாவும் விரைவில் வெளிவரும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வத்சலாதேவி மீது மேற்கொள்ளவுள்ள சட்டநடவடிக்கைகள் அவரை சுற்றி வளைக்குபோது, தமது வியாபரத்திற்காக இவரை பங்கு போட்டுக்கொண்டுள்ள இமானுவேல் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோரால் சுனேத்திராவை காப்பாற்ற முடியுமா என்பதுதான் பலராலும் கேட்கப்படுகின்ற கேள்வியாகவிருக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com