Friday, September 2, 2011

அனுமதியற்ற X-RAY இயந்திரங்கள் தொடர்பாக அவதானமாக இருப்பீர். மின்வலு அமைச்சு

அணுசக்தி அதிகார சபையின் அனுமதியின்றி எக்ஸ்ரே இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அணுசக்தி அதிகார சபையின் அனுமதியைப் பெற்று எக்ஸ்ரே இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிலையங்களில் மாத்திரம் எக்ஸ்ரே படங்களை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட நிலையங்களை மக்கள் அறிந்துகொள்வதற்காக அந்த நிலையங்களில் பதிவுச் சான்றிதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவுச் சான்றிதழ்கள் காட்சிப்படுத்தப்படாத நிலையங்களில் எக்காரணம் கொண்டும் எக்ஸ்ரே படங்களை எடுக்க வேண்டாம் என்றும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

எக்ஸ்ரே இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படுகையில் அந்த இயந்திரங்களின் தொழில்நுட்ப செயற்பாடுகள் அதன் மூலம் நோயாளிகளுக்கோ அல்லது அதன் அருகில் இருக்கும் ஊழியர்களுக்கோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதனை நன்றாக ஆராய்ந்த பின்னரே அணுசக்தி அதிகார சபையினால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக இயங்கும் எக்ஸ்ரே இயந்திரங்களில் இருந்து சிலவேளைகளில் எக்ஸ் கதிர் கசிவு ஏற்படுமாயின் அது எக்ஸ்ரே எடுக்கச் செல்பவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தலாம் என்றும் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment