Thursday, September 22, 2011

இந்திய பெருங்கடலில் உளவு விமான தளம் அமைக்கும் அமெரிக்கா!

ஆளில்லா விமானம் மூலம் ஆப்கானில் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதில் வெற்றி கண்ட அமெரிக்கா, தற்போது இந்திய பெருங்கடலிலும் ஆளில்லா உளவு விமான தளத்தை அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கி இருந்த அல் காய்தா மற்றும் தாலிபன் தீவிரவாதிகளை அழித்தொழிக்க, ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின அமெரிக்க படைகள்.

இதற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில், தற்போது அல் காய்தா தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என கருதப்படும் நாடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஆளில்லா உளவு விமான தளங்களை அமைத்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இவ்வாறு விமான தளத்தை அமைத்து வருவதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அமெரிக்காவின் தொடர் அழுத்தங்கள் மற்றும் தாக்குதல் நடவடிக்கை காரணமாக அல் காய்தா இயக்கத்தினர் தங்களது தளத்தை தெற்காசியாவிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றக்கூடும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்த கருத்தை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி "த வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment