Monday, September 26, 2011

சவூதி பெண்களும் இனி வாக்களிக்கலாம்- மன்னர் அப்துல்லா உத்தரவு

அரேபிய நாடுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்காத நாடாக திகழ்ந்து வந்த சவூதி அரேபியா தற்போது அதிலிருந்து வெளி வரப் போகிறது. அங்குள்ள பெண்களும் இனிமேல் வாக்களிக்கலாம் என்று சவூதி மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார். 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் அமலுக்கு வருகிறது என்று அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் அங்கு பெண்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அரேபிய நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.

கார் ஓட்டக் கூடாது, ஓட்டுப் போடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள் சவூதி பெண்கள்.

இதுபோன்ற பழையான கட்டுப்பாடுகளை எதிர்த்து சவூதி பெண்கள் போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளனர். சமீப காலமாக தடையை மீறி கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து பெண்கள் பெரும் போராட்டங்களில் குதித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறுவதற்குள் அவற்றைத் தவிர்க்கும் நடைபெறும் நடவடிக்கைகளை எடுக்க சவூதி அரசு முடிவு செய்தது. அதன்படி முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமை அனுமதியை தற்போது பெண்களுக்கு அளித்துள்ளது சவூதி அரசு. இதற்கான உத்தரவை சவூதி மன்னர் அப்துல்லா பிறப்பித்துள்ளார்.

இருப்பினும் வருகிற செப்டம்பர் 29ம் தேதி சவூதியில் நடைபெறும் நகராட்சித் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியாது. 2015ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில்தான் இந்த வாக்குரிமை உத்தரவு அமலுக்கு வருகிறது.

மன்னர் அப்துல்லா, காலத்துக்கேற்ற வகையில் அவ்வப்போது சில தாராள நடவடிக்கைகளையும், சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது இந்த பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் தேர்தலி்ல போட்டியிடும் உரிமை உத்தரவு மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று தெரிகிறது.

அதேசமயம், சவூதி பெண்களுக்கு இது மிகப் பெரிய உற்சாகமளிக்கும் உத்தரவாக அமைந்துள்ளது. இதுவரை அவர்களால் ஒரு கவுன்சிலராகவோ, அமைச்சராகவோ முடியாத நிலை நிலவி வந்தது. தற்போது அது மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதேபோல கார் ஓட்டும் உரிமையும், கணவர் அல்லது குடும்பத்து ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது என்ற நிலையையும் மாற்றி மன்னர் உத்தரவிட்டால் அது மிகப் பெரிய வரவேற்புக்குரியதாக இருக்கும் என்று பெண் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

2015ம் ஆண்டு முதல் வாக்களிக்கலாம் என்பதை மாற்றி உடனடியாக வாக்குரிமையை அமல்படுத்த வேண்டும் என்று சவூதி பெண்கள் உரிமை ஆர்வலர் வஜேஹா அல் ஹவைதார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏன் இந்த முக்கிய உத்தரவை 4 ஆண்டுகள் கழித்து அமல்படுத்த வேண்டும். இப்போதே அதை அமல்படுத்த வேண்டும். இதுவே எங்களுக்கு ஒரு அவமானமாக தெரிகிறது என்றார்.

மன்னரின் ஆலோசனை சபையான ஷுரா கவுன்சிலில் ஆற்றிய உரையின்போதுதான் மன்னர்அப்துல்லா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் மதக்குருமார்களுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பெண் உரிமைப் போராளியும், பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற உத்தரவை மீறி கார் ஓட்டி வருபவருமான கல்வி அமைச்சக ஊழியையான மஹா அல் கத்தானி என்பவர் கூறுகையில், நாங்கள் அரசியலில் கூட இடம் கேட்கவில்லை. அடிப்படை உரிமைகளைத்தான் கேட்கிறோம். சமத்துவமாக எங்களை பாவியுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆண்களை விடநாங்கள் எந்த வகையில் குறைந்து போய் விட்டோம் என்றுதான் கேட்கிறோம்.

வாக்குரிமை மட்டுமல்லாமல் மேலும் பல பிரச்சினைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். அவையும் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

சவூதியின் இந்த முக்கிய முடிவை அமெரிக்கா வரவேற்றுப் பாராட்டியுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com