நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காது.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னர் நடந்த விசாரணைகளின் எழுத்து வடிவ ஆவணங்களை ஆராய்ந்த சர்வதேச மன்னிப்புச் சபை, பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன என்றும் உள்நாட்டுப் யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் அடிப்படையில் குறைபாடுள்ளவை என்றும் இந்த விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதியையும் வழங்காது என்றும் மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் யுத்தத்துக்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் மூலம், விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.
ஆனால் மனித உரிமை அமைப்புகளோ இது குறித்து தமது ஐயப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஒரு சுயாதீனமான விசாரணையை தடுப்பதற்காகவே இலங்கை அரசு இந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைகள் குழுவை அமைத்தது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு சுயாதீனமான விசாரணையை நடத்த இலங்கை அரசை ஒப்புக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தின எனவும் மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன.
யுத்தத்தின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டது, பலவந்தமாக ஆட்கள் கடத்தப்பட்டது போன்ற விடயங்கள் அந்த ஆணையத்தால் உரிய முறையில் கவனிக்கபப்டவில்லை என்று தமது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை கூறுகிறது.
இப்படியான குற்றச்சாட்டுகளை ஆராயாமல், சாட்சியம் அளித்தவர்களை பழைய விடயங்களை மறந்து விடுமாறு, அந்த ஆணையம் வலியுறுத்தியது என்றும், சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறுகிறது.
இலங்கை அரசை அந்த ஆணையம் காப்பாற்றி வருகிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பகுதிக்கான இயக்குநர் சாம் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது இருதரப்பினரும் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று தொடர்ந்து எழுந்து வரும் நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் புறந்தள்ளி அரசை காபாற்றும் நடவடிக்கையிலேயே கவனம் செலுத்தி வருவது ஆணையத்தின் பக்கசார்பற்றத் தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன என்றும் சாம் ஜாஃப்ரி கூறுகிறார்.
ஆனால், அரசினால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவோ, சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட மனித உரிமை அமைப்புகளை தம்முன்னர் வந்து சாட்சியம் அளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துவிட்டன என அதன் ஊடக ஆலோசகர் லக்ஷ்மண் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பான விடயம் சில நாட்களில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், யுத்தத்தின் இறுதிகட்டம் குறித்த ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணை தேவை என்கிற அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
இந்த ஆண்டின் முற்பகுதியில், தமிழ் கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதாக வெளியான படங்கள் உண்மையானவையே என்று ஐ நா வின் அதிகாரிகள் குழு ஒன்று முடிவு செய்திருந்தது. அந்தக் குழுவிலிருந்த ஒரு ஆய்வாளர் அந்தப் படம் மட்டுமே யுத்த குற்றங்கள் இடம்பெற்றன என்பதற்கு சாட்சியாகும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment