Wednesday, September 21, 2011

அமெரிக்காவில் பூகம்பம் ஏற்பட நேபாள பிரதமர் பிரார்த்தனை!

நேபாள நாட்டின் துணை பிரதமரான பிஜய் குமாருக்கு அமெரிக்கா மீது என்ன கடுப்போ தெரியவில்லை. எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்கம் அந்த நாட்டில் நிகழட்டும் என்று பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். கடந்த ஞாயிறன்று இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், நேபாளத்தையும் தாக்கியது. இதில் உயிரிழப்பும், பலத்த சேதமும் ஏற்பட்டது.

இதனிடையே நேபாளத்தின் புதிய பிரதமரான பாபுராம் பட்டாரய், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ளதால், துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பிஜய் குமார்தான் பிரதமர் பொறுப்பையும் தற்காலிகமாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், நிலநடுக்க சேதம் குறித்து நேபாள நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அதற்கு பதிலளித்து பேசிய பிஜய் குமார், நிலநடுக்கத்தை தொடர்ந்து அரசு மேற்கொண்ட நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், நிலநடுக்கத்தை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. அண்டை நாடுகளான இந்தியாவிலோ அல்லது சீனாவிலோ அதனை தடுத்து நிறுத்த முடிந்ததா? அப்புறம் எப்படி நம்மால் மட்டும் தடுத்து நிறுத்த முடியும்?

இனிமேல் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் நிகழட்டும் என்று பசுபதிநாதரை ( நேபாளத்தின் இந்து கடவுள்) நான் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

நேபாள பிரதமர் பாபுராம் தற்போது நியூயார்க் சென்றுள்ளதோடு மட்டுமல்லாமல், அவருக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டால் அதனை சமாளிப்பது குறித்த பயிற்சிகளை நேபாள இராணுவத்திற்கு அமெரிக்க இராணுவம் தற்போது பயிற்சி அளித்து வருகிறது.

இந்த நேரத்தில் நேபாள துணை பிரதமர் மேற்கண்ட்வாறு பேசியிருப்பது காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க உள்ளிட்ட பிற நாட்டு தூதரக அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment: