Friday, September 30, 2011

தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் மரணம்.

கம்பஹா பிரதேசத்தில் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதலை நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தினர். அவர்கள் சில மோட்டார் சைக்கிள்களுக்குத் தீ வைத்ததன் காரணமாக பொலிஸ் நிலைய வளாகத்தில் தீச்சுவாலை காணப்பட்டது. பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கட்டுலந்த பிதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் மரணமாகியுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமுற்ற பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை இன்று சுற்றி வளைத்து பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு படைப்பிரிவு வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க அங்கு விசேட அதிரடிப்படையினரும் மேலதி பொலிஸாரும் விரைந்துள்ளனர்.

இதேவேளை, தனது மகனின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட அந்த இளைஞனின் தந்தையார் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றது.

பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள வீதிகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com