கையில் ஆயுதமும் கழுத்தில் நஞ்சும் ஏந்தி நின்ற நாம் அபிவிருத்தி எனும்போது...
தமிழீழம் என்போர் யார்? கேட்கின்றார் பிள்ளையான்
கையிலே ஆயுதங்களையும், கழுத்திலே நஞ்சையும் சுமந்து களத்திலே போராடி தியாகம் செய்த அனைவருமே தற்போது தமிழ் மக்களின் எதிர்காலம், அவர்களின் அபிவிருத்திப் பாதை மற்றும் ஏனைய தேவைகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற மேலாதிக்கத் தலைவர்கள் தான் தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'ஆயுத போராட்டத்தின் நேரடி பங்காளிகள் ஜனநாயகம், அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற இவ்வேளையில் போராட்டத்திற்கோ தமிழ் மக்களின் அபிவிருத்திக்கோ எந்த பங்களிப்புமே செய்யாத ஒரு சில அடிவருடிகள் தற்போது தாங்கள்தான் தமிழீழம் பெறப்போவதாகவும், தமிழ் மக்களின் அபிவிருத்திகள் பற்றி சிந்திப்பதாகவும் அவர்களின் நலன்பற்றிப் பேசுவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை நினைக்கும் போது வேதனையளிக்கின்றது.
தொடர்ந்து அவர் பேசுகையில் கிழக்கின் இயல்பு நிலையை குழப்ப முயற்சிக்கும் எவருக்கும் இடமளிக்க முடியாது. ஏனெனில் போராட்டத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவர்கள் அவர்கள்தான். ஆனால் போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற மேலாதிக்கத் தலைவர்கள் தான் தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அப்போது களத்தில் போராடும்போது இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களது பிள்ளைகள், உறவினர்கள் எங்கிருந்தார்கள் என நான் கேட்கின்றேன். எங்கேயோ இருந்து கொண்டு அழிவுக்கான பாதையைப் பலப்படுத்திக் கொண்டு சென்றார்களே தவிர மக்களது ஆக்கபூர்வமான அபிவிருத்தி மக்களின் எதிர்காலம் பற்றி சிறிதளவேனும் இவர்கள் சிந்திக்கவில்லை.
அப்போது இவர்கள் சிந்தித்து இருந்திருந்தால் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். பேராட்டம் முடிந்துவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே ஆதலால் அவர்கள் எங்களது மக்கள் தொடாந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் அப்போ தான் அவர்களும் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வெளிநாடுகளில் சொகுசாக வாழமுடியம் என்பதனை உணர்ந்து செயற்பட்டார்கள். எங்களுக்குக் கிடைத்திருக்கின்ற இந்த அரியசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்துவந்த கஸ்டங்கள் மற்றும் இழப்புக்களை ஈடுசெய்ய நாம் உழைக்க வேண்டும். மாறாக எங்கேயோ இருந்து கொண்டு எங்களை ஆளநினைக்கும் அந்தக் கூட்டத்திற்கு சரியான பாடத்தினை நாம் புகட்ட வேண்டும்.
மக்களே நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள் வடமாகாணத்தினைப் போன்று தனியான தமிழ் மக்கள் வாழ்கின்ற மாகாணமா எமது கிழக்கு மாகாணம் நிச்சயமாக இல்லை. பூகோள ரீதியாகவும் இனரீதியாகவும் மூவினங்களுடனும் ஒன்றாக இணைந்துதான் வாழவேண்டும். ஆகவே எங்களது மாகாணத்திற்குள் நாம் இனரீதியாகவோ அல்லது மதரீதியாகவோ அடிபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. அவ்வாறு ஏதும் நிகழுமாயின் எமது மாகாணத்திற்குத்தான் அது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment