Tuesday, September 13, 2011

முன்னேஸ்வரம் ஆலய பலி பூஜையை நிறுத்திய மேர்வின் சில்வா

சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவில் பலியிடுவதற்காக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை தனது 50 பேருக்கு மேற்பட்ட ஆட்களுடன் சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இன்று முற்பகல் காளி அம்மன் ஆலயத்திற்கு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா விலங்குகளை பலியிடுவதற்க தான் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் இந்த விலங்குகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆடுகளையும் பண்ணைகளுக்குத் தாம் வழங்கப் போவதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் நடைபெறும் பூஜை நடவடிக்கைகளுக்கு தாம் எந்த இடையூறும் செய்யவில்லை எனவும் மிருகங்களை பலிகொடுப்பதற்கு மாத்திரமே தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார். 'இது மத ரீதியான பிரச்சினை அல்ல. மிருகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையே இது. களனியிலும் இத்தகைய நடவடிக்கைகளை நான் தடுத்து நிறுத்தினேன். இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் மிருக பலிகளையும் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன்' என செய்தியாளர்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மிருகபலி வேள்வியை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளியம்மன தேவஸ்தானத்தில் வருடாந்தம் இடம்பெறும் மிருக பலி பூஜையினை நடாத்துவதற்கு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த மிருக பலி பூஜை இன்று இடம்பெறவிருந்த நிலையிலேயே சிலாபம் நீதவான் ஆர். எம். ஜயவர்தன இந்த தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com