Sunday, September 25, 2011

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மகாநாடும் தீர்மானங்களும்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்திர மகாநாடு 2011-09-25 அன்று இடம்பெற்ற போது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி நிபந்தனை அற்ற ஆதரவினை கொடுத்தது. எமது ஒற்றுமையினை நிலைநாட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பல்வேறு உளளுராட்சி மன்றங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சில வேட்பாளர்களை, தமிழ்மக்களின் விருப்பத்திற்கு அமைய கொடுத்து உதவினோம். உதயசூரியன் சின்னத்தில் இரு உளளுராட்சி மன்றங்களில் போட்டியிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்தோம். தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழர் தேசிய கூட்டமைப்போடு உள்ள உறவினை மீண்டும் வலியறுத்தி பொது மக்களின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து செயற்படுவதோடு ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாதவகையில் செயற்படும்.

2. தமிழர் விடுதலைக் கூட்டணி தமது அகிம்சை கொள்கையை மீண்டும் வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை மூலம் இசைய வைத்து சமாதான முறையில் நியாயமான தீர்வை வென்றெடுக்கும்.

3. தமிழர் விடுதலை கூட்டணி சிங்களவர், இஸ்லாமியர், மலாயர், பறங்கியர், ஆகியோருடனும் மற்றும் இன மத மக்களுடனும் நல்லுறவைப் பேண திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேவேளை அரசு இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் சமமாக நடத்தி அவர்களுடைய மறுக்கமுடியாத ஜனநாயக மனிதாபிமான உரிமைகளுடன் ஏனைய உரிமைகளையும் அனுபவிக்க உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

4. 30 ஆண்டிற்கு மேலாக வடகிழக்கு வாழ் மக்கள் அனுபவித்த தாங்க முடியாத துன்பங்களை குறிப்பாக யுத்தம் உச்சக்கட்டம் அடைந்த போது மேலோங்கி நின்ற வன்முறையை வேறு எந்த துன்ப சம்பவத்துடனும் ஒப்பிட முடியாது. சுனாமி போன்ற தேசிய இயற்கை அழிவினை நாட்டில் உள்ள அனைவரினதும் குறிப்பாக தமது சமய நம்பிக்கை கோட்பாடு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கும் சிங்கள கிராம வாசிகளில் மூத்தோரின் உள்ளத்தினை தொட்டுள்ளது என்றால் தழிழ் மக்களுக்கு எற்பட்ட அழிவுகள் எவ்வளவு தூரம் அவர்களை பாதித்திருக்கும் என்பதை கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாது. சுனாமியின் பின், ஒர் சிங்கள மூதாட்டி தன் தலை மீது பல உணவு பொட்டலங்களை சுமந்து, சீரற்ற பாதையினால் வெகுதூரம் நடந்து சென்று, தனக்கு முன் பின் தெரியாத தமிழ், இஸ்லாமிய சகோதரர்களின் பசியினை தீர்த்து வைத்தார் என கூறும் பொழுது எனக்கு கொஞ்சம் பெருமையாக தான் இருக்கின்றது. இதேபோன்று ஒரு சிங்களவர் கூட இல்லாத தமிழ் இஸ்லாமிய அகதிகளுக்கு ஒர் பௌத்த மத குரு அகதி முகாம் அமைத்து அளப்பரிய சேவை செய்தார். தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, சிங்களவர்களோ கிராமவாசிகளின் மன போக்கு இவ்வாறு தான் எங்கும் இருக்கின்றது. எனவே ஒர் பிரச்சினையை அனுதாபத்தோடு அணுகக்கூடிய சாதாரணமான மக்களிடம் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் பொறுப்பினை ஜனாதிபதி கையளிக்க வேண்டும். கிராமவாசிகள் நியாயமாக சிந்திப்பர், நியாயமாகவும் நடப்பர். இதனை சர்வதேச வாக்கெடுப்பு மூலம் மக்களின் தீர்ப்புக்கு விடவதே சிறந்தது என தமிழர் விடுதலைக் கூட்டணி நம்புகின்றது.

5. யுத்தம் முடிவுற்று 2 வருடங்களின் பின்பும் மீள குடியேற்றப்பட்ட ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேறி ஒருவருடம் ஆகியும் முறையாக தமது வாழ்வினை ஆரம்பிக்கவில்லை. அநேகருக்கு தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துவதற்குரிய போதிய வழிவகை இல்லை. அநேகர் வீட்டுத்தலைவன் கணவன், மனைவி, பிள்ளைகள் என இழந்துள்ளனர். அநேகமாக எல்லா மக்களும் தமது உடைமைகள் அனைத்தையுமஇ; வீடுகளினையும் இழந்து உள்ளனர். ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் பொருத்தமான வழிமுறையில் உளளுர் மக்களின் பங்களிப்போடு மீளக்குடியேற்றம் புனர்நிர்மானம் ஆகியவற்றை நீதியான முறையில் அமுல்படுத்த வேண்டும்.

6. நாடு பூராக மக்களிற்கு பூரண சமாதானமும் குறிப்பாக யுத்தத்தால் அழிவடைந்த வடகிழக்கு பகுதிகளில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. மனத்திருப்தி அற்ற சமுதாயத்தால் சமாதானத்தினை அடைய முடியாது. வட கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இடம் பெயராது இருக்கவில்லை. சிலர் 18 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்துள்ளனர். அத்தகைய நடை முறையின் போது அவர்கள் தமது சொத்துக்கள் அனைத்தையும். இழந்து தம்வாழ்கையினை கொண்டு நடத்த முடியாத அளவிற்கு ஒட்டாண்டி ஆகிவிட்டனர். இந்த பரிதாபகரமான நிலையில் இவர்களின் முக்கியமான பிரச்சினை காணி சம்பந்தப்பட்டதே. தங்களுடைய காணிகளையும் தாங்கள் வாரிசாக பெற்ற காணிகளையும் இன்னும் அநேகர் அடையாளம் காணவில்லை. அநேகமான காணி சொந்தக்காரர்கள் பிறநாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் பராயம் அடையாதவர்கள். அநேகர் தமது காணி உறுதிப்பத்திரங்களை இழந்துள்ளனர். இத்தகைய பல பிரச்சினைகள் மத்தியில் மக்களை தமது காணிகளை பதியுமாறு கேட்பது அவசியம் தானா? தாம் ஆண்டு அனுபவிக்கும் காணிகளையும் பதியுமாறு கேட்பதை தமிழர் விடுதலைக்கூட்டணி தமது கடும் ஆட்சேபனையை அரசிற்கு தெரிவித்துக் கொள்கின்றது. அரசு காணி கொடுக்க விரும்பின் காணிப் பிரச்சனை தீரும் வரை பொறுத்திருக்க வேண்டும். இத்திட்டத்தினை நாடு பூராகவும் அமுல்படுத்துவதாக இருப்பின் அரசு அப்பணியினை இடம் பெயராது வாழ்கின்ற மாவட்டங்களில் ஆரம்பிக்கலாம் நில சொந்தக்காரர்களிடம் இருந்து அவர்களின் காணி விபரங்களினை பெறுவதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலைகூட்டணி வன்மையாக வற்புறுத்தி வேண்டுகின்றது. மேலும் மரணம் அடைந்த பலரது காணிகள் இக்கட்டத்தில் இன்னும் கண்டறியவோ அடையாளம் காணவோ முடியவில்லை.

7. விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்னும் சந்தேகத்தில் பல இளைஞர், யுவதிகள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகர் குற்றமற்றவர்கள் விடுதலைப்புலிகளின் தீவிர போக்காளர்கள்; தமது தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு இன்று இராணுவத்தின் புலனாய்வு பிரிவில் இணைந்து செயலாற்றும் போது, பலாத்காரமாக சேர்க்கப்பட்ட சிறுசிறு வேலைகள் செய்வதற்கும் உணவு வழங்கியதாகவும் சந்தேகப்பட்டு அப்பாவிகளினை பிடித்து வைத்திருப்பது நியாயமற்ற செயலாகும். அத்தகையோரை உடன் விடுதலை செய்யும்மாறு அரசினை தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. மேலதிகாரிகளின் ஆதரவினை பெறுவதற்காக அப்பாவி இளைஞர்கள் பற்றி பொய்யான தகவல்களை முன்னாள் விடுதலைப்புலிப்போராளிகள் இன்று இராணுவ புலனாய்வுப்பிரிவில் இணைந்து கூறிவருகின்றனர். இத்தகையோரின் அறிக்கைகள் மூலமாக அப்பாவிகள் தண்டிக்கப்படுவது துரதிஷ்டமே

8. யுத்தம் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பல நஷ்டத்தினை ஏற்படுத்திக்கொடுத்ததுடன் மனஉளச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஆயுதங்களைக் கண்டதும் பைத்தியம் பிடித்தது போல் காணப்படுகின்றனர். கிறிஸ்பூதங்களின் பிரசன்னமும் நடவடிக்கைகளும் நிலைமையினை மிகவும் மோசம் அடைய வைத்துள்ளது. பொழுது சாயும் நேரம் தொடக்கம் பொழுது புலரும் வரை பெண்கள் வீட்டின் வெளியே வருவதில்லை குறிப்பாக வயது முதிர்ந்த பெண் பிள்ளைகள் பாடசாலை செல்வதினை நிறுத்தியுள்ளனர். ஆண்கள் பெண்களிற்கு பாதுகாப்பிற்காக இரவு பகலாக விழித்திருப்பதால் தம் வேலைகளினை சரிவர செய்யாது வருமானத்தில் பெருமளவினை இழக்கின்றனர். இவ்விடயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கத்தவரின் விளைவுகள் படுமோசமாகும். ஆகவே தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு ஐனாதிபதி ஆணைக்குழுவையோ அன்றில் உயர் சக்தி படைத்த ஒரு குழுவினையோ நியமித்து பூரண விசாரனை நடாத்த வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி ஐனாதிபதியினை வற்புறுத்துகின்றது.

9. தம்வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமிய மக்கள் அவர்களின் வீடுகளில் மீள்குடியேற்றப்படவில்லை தம் உடைமைகள் அனைத்தையும் கைவிட்டு சொற்ப பணத்துடனேயே சென்றனர். அவர்களுக்கு முறைப்படி நஷ்டஈடு கொடுத்து அரசே வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் 1983ம் ஆண்டு யூலைக்கலவரத்தில் நாடு தழுவி வாழ்ந்த தமிழர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நாட்டைவிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் குடியேறினர். எனவே போதியளவு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் அவர்கள் மீளக்குடியேறுவதற்கு தூண்டுதலாக அது அமையும். அவர்கள் இழந்த அசைவற்ற ஆதனங்களை பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து மீட்;டுக்கொடுக்க வேண்டும். அத்துடன் இடம் பெயர்ந்த மக்கள் இழந்த சொத்துக்களிற்கு நஷ்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி கூறியதினை நினைவூட்டி சொத்துக்களை இழந்தவர்களுக்கு அரசு நஷ்டஈட்டினை வழங்குவதோடு தம் நிலங்களை இழந்து தெற்கே சென்ற மக்களுக்கு அவர்களின் காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

10. இராணுவத்தினரால் யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட தங்கம் மக்களுக்கு சொந்தமானது. சிலர் விடுதலை புலிகளிடம் தமது நகைகளை ஈடு வைத்துள்ளனர். இது தவிர ஒவ்வொரு வீட்டுக்காரரும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை விடுதலைப் புலிகளின் மண்ணைக் காக்கும் நிதிக்கு செலுத்தி பற்றுச்சீட்டும் பெற்றுள்ளனர். இத்தங்கத்தை சட்டப்படியும் தார்மீக அடிப்படையிலும் மக்களுக்கே சொந்தமாகையினால் அரசு மக்களுக்கே மீள கையளிக்க வேண்டும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகின்றது.

11. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னொருபோதுமில்லாத வகையில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். போத்துவிலிலுள்ள அறுகம்பை தொடக்கம் யாழ்ப்பாணத்திலுள்ள மயிலிட்டி வரை இத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சொல்லொணா கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். மீன் பிடிப்பதற்கு மீனவர்கள் எவரிடமும் அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய அவசியம் இல்லை. உள்ளுர் மீனவர்களுக்கு இத்தகைய இடையூறுகளை கொடுப்பதை வன்மையாக கண்டித்து 30 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு சுதந்திரமாக தொழிலில் ஈடுபட்டார்களோ அவ்வாறே அவர்களை விட்டுவிடும்படி தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்துகின்றது.

12. படையினரால் குறிப்பாக பெண் படையினர் மனிதநேய சேவையை இயற்கை அனர்த்தங்களின்போதும் அகதி முகாம்களிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆற்றிவந்த தொண்டை தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கீகரித்து பாராட்டையும் தெரிவிக்கின்றது. சுpல சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் கொடூரமான நடவடிக்கைகள் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆண்மையில் நாவாந்துறையில் மிருகத்தனமாக ஆண்களும் பெண்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை இதற்கு சான்றாகும். 1970ம் ஆண்டு பிற்பகுதியிலும் 1980க்களின் முற்பகுதியிலும் இராணுவத்தினரது கொடூர நடவடிக்கைகள் இளைஞர்களை தலைமறைவாகச் செய்யவும் ஆயுதங்களை ஏந்தவும் வழிவகுத்தது. முன்பிருந்து இயங்கிவந்த இராணுவ முகாம்களை இயங்க வைக்க மிக சிறு இராணுவத்தினரை ஈடுபடுத்திக்கொண்டு ஏனைய புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்றும்படியும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்துகிறது. கடந்த காலத்து மகிழ்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம் என மக்கள் எண்ண வேண்டுமேயொழிய வேறு சிலரின் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்றல்ல. நாட்டிற்கு சுமூக வாழ்வை மீள கொண்டுவர அரசுக்குள்ள ஒரேயொரு வழி இது மட்டுமே. 200000க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களையும் பல கோடிகள் பெறுமதியான சொத்துக்களையும் இழந்தும் இனப்பிரச்சனை தீர்வுக்கு அவசியமற்ற காலவிரயத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது அதிருப்தியை தெரிவிக்கின்றது. அவசியமேற்படின் பொருத்தமான சில மாற்றங்களுடன் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வை அரசு முன்வைக்க வேண்டுமென நாம் அரசை வற்புறுத்துகின்றோம்.

13. இந்திய முறையிலான ஆட்சிக்கு இலங்கை வாழ் மக்களில் பெரும்பான்மையினர் உடன்பாடானவர்கள் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்க்கமான அபிப்பிராயமாகும்.

14. இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றையாட்சி முறையில் அமையுமானால் சமாதானமோ அல்லது நிரந்தர தீர்வோ ஒருபோதும் ஏற்படாது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் திடமான எண்ணக்கருவாகும்.

15. மக்கள் தம் உறவுகளை எண்ணி துயருடனும், தாமே இன்னும் முறையாக வாழ்வை ஆரம்பிக்காத நிலையிலும் பிறரை அவர்கள் மத்தியில் குடியிருக்க வைப்பது எதிர்பார்ப்புக்கு முரணாக அமையும் என்ற பாடத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு புகுத்துகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com