காணாமல் போன ஆசிரியை வத்தளையில் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனியார் சிங்களப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றும் ஒரு பிள்ளையின் தாயாரான பெண்னொருவரின் சடலம் வத்தளையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. கொச்சிக்கடை, தளுவக்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறியாணி வாசனா (33 வயது) என்பவரது சடலமே வத்தளை பொலிஸாரால் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இவரது கணவர் வெளிநாடொன்றில் வேலை செய்பவராவார். 9 வயதில் பிள்ளை ஒன்றும் இவருக்கு உள்ளது. நேற்று முற்பகல் வீட்டை விட்டு தேவை ஒன்றுக்காக புறப்பட்ட இவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சிகையலங்கார நிலையமொன்றுக்குச் சென்று விட்டு மின்சாரக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு வருவதாக வீட்டாரிடம் இவர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். நேரம் கடந்தும் இவர் வீடு திரும்பாததையடுத்து அவரது செல்லிடத் தொலைபேசிக்கு வீட்டார் தொடர்பைபை எடுத்துள்ளனர். அழைப்பு மணி ஒலித்த போதும் பதிலளிக்கபடாத நிலையில் பிற்பகல் 2 மணியின் பின்னர் செல்லிடத் தொலைபேசி முற்றாகச் செயலிழந்துள்ளது.
இந்நிலையிலேயே இவரது சடலம் வத்தளை டொயட்டா கம்பனி அருகில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸாரும் கொச்சிக்கடை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்- ஷாஜஹான்
0 comments :
Post a Comment