சிக்கலில் உலகப் பொருளாதாரம்: ஐ.நா.வில் மன்மோகன் சிங்
2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவை விட மிக ஆழமான பொருளாதார சிக்கலில் உலகப் பொருளாதாரம் உள்ளது என்று ஐ.நா.வின் 66வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பொருளாதார உலகமயமாக்கல், உலகளாவிய சார்பு ஆகியவற்றின் வெற்றியை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கொண்டாடிய நாம், இப்போது அதன் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறிய பிரதமர், உலக அளிவில் பொருளாதார, சமூக, அரசியலில் ஏற்பட்டுள்ள சரிவுகள் நாடுகளையும் கண்டங்களையும் பாதித்துள்ளது என்று கூறினார்.
உலகப் பொருளாதாரத்தை இயக்கிவந்த அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகியன தொடர்ந்த பொருளாதார பின்னடைவை சந்தித்து வருவதால், அதன் விளைவாக உலகப் பொருளாதாரமும், நிதி நிலைத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, உலக நிதி மற்றும் முதலீட்டுச் சந்தைகளையும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளன.
ஏற்கனவே பணவீக்கத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிற மூன்றாவது உலக நாடுகள், பொருளாதார பின்னடைவின் காரணமாக ஏற்பட்ட சுமையையும் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் பொருட்களுக்கு இருந்த தேவை குறைந்து வருவதும், மூலதன பற்றாக்குறையும், கட்டுப்பாட்டற்ற சந்தைக்கு அதிகரித்துவரும் தடைகளும், அதிகரித்துவரும் கடன் சுமையும் உலக நாணய, நிதி அமைப்புகளின் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாம் கடைபிடித்துவரும் பிரெட்டன் வுட்ஸ் வழியிலான பொருளாதார அமைப்புகள் உள்ளபடியே திறன் வாய்ந்தவையா என்ற சிந்தனையை உருவாக்கியுள்ளன. சமமற்ற வளர்ச்சி, போதுமான வேலை, கல்வி வாய்ப்பு இல்லாமை, அடிப்படை சுதந்திரம் மறுப்பு ஆகியன தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை தள்ளுகின்றன.
பன்னாட்டு உறவுகளிலும், உள்நாட்டு விவகாரங்களிலும் சட்டத்தின் ஆட்சி கடைபிடிக்கப்பட வேண்டும். இராணுவ பலத்தைக் கொண்டு வெளியில் இருந்து சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. எந்த நாட்டு மக்களானாலும், அவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையை அளித்திட வேண்டும்.
எல்லா விதமான சமூக, அரசியல் மாற்றத்திற்கும் உதவ வேண்டும், ஆனால், அது உள்ளிருந்துதான் எழ வேண்டும், வெளியில் இருந்து திணிப்பது ஆபத்தில் முடியும். முன்னெற்றத்திற்கான வழிகளை மக்களே முடிவு செய்துகொள்ள அரசுகள் உதவ வேண்டும். அதுவே மனித குல விடுதலை, ஜனநாயகம் ஆகியவற்றின் சாராம்சமாகும்.
கடந்த சில பத்தாண்டுகளில் வறுமையில் உழன்றுக்கொண்டிருந்த பல இலட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது. எங்களது மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு அளிக்கவும், கல்வி தரவும், பொருளாதார வாய்ப்புகளை அவர்கள் தேர்வு செய்துகொள்வதற்கும் இடமளித்துள்ளோம். ஆயினும் நாங்கள் போக வேண்டிய பாதை மிக தூரமானது. எங்களுக்கு வேளாண் துறையிலும், தண்ணீர் காப்பிலும், நிலப் பயன்பாட்டிலும், உற்பத்தியை அதிகரிப்பதிலும், அத்யாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் ஒத்துழைப்புத் தேவை. வளரும் நாடுகள் மேம்பட அமைதியான சூழல் தேவை. எனவே பயங்கரவாதத்திற்கு எதிரான தொடர்ந்த போர் அவசியமாகிறது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
0 comments :
Post a Comment