விடுதலைப் புலிகள் இருந்த காலத்தை விட உக்கிரமாகவுள்ளது- பசில் ராஜபக்க்ஷ
தற்போது ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்கள், இராணுவ வீரர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இருந்த காலத்தை விட உக்கிரமாகவுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கூறினார்.
நீர்கொழும்பு மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறுகூறினார். நெதர்லாந்து அரசின் உதவியுடன் 7200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிக்கும் வைபவம் 19-9-2011 அன்று கொச்சிக்கடை, பம்புக் குழி நீர் விநியோகத் திட்ட அலுவலக வளவில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, எமது மக்கள் எங்கு வாழ்ந்தாலும் நகரத்தில், கிராமத்தில், தோட்டத்தில் வாழ்ந்தாலும் வடக்கில், தெற்கில், கிழக்கில், மேற்கில் வாழ்ந்தாலும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களானாலும் எந்த குலத்தைச் சேர்ந்தவர்களானாலும் எந்த மொழியைப் பேசினாலும் சகலரையும் சரிசமனாக கவனிக்க வேண்டும் என மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி மகிந்த ராஜபக்க்ஷ இந் நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது அவரின் வேலைத் திட்டமாக மஹிந்த சிந்தனையை முன்வைத்தார். அதன் மூலம் இந்நாட்டு மக்களை பலப்படுத்தி அச்சமின்றி கௌரவமான சமாதானத்துடன் வாழவும் நாட்டின் இறைமையை, நல்லாட்சியை ஏற்படுத்தி இந்த நாட்டை உலகின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றவும் திட்டமிட்டார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிம்மதியாக வாழும் உரிமையை பெற்றுக் கொடுத்ததினால் உலகில் பல நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையிலும் பதில் சொல்ல வேண்டியேற்பட்டுள்ளது.
எமது இறைமையை இல்லாமல் செய்வதற்கு முற்படுவதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். நாம் அரசியல் வேறுபாடுகளுக்காகவும் இன்னும் பல தேவைகளுக்காகவும் பிரிந்திருந்தால் பிறக்கவிருக்கும் பிள்ளைகளின் சுதந்திரமும் சுயாதீனத் தன்மையும் இல்லாமல் போகும் என்றார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
0 comments :
Post a Comment