Wednesday, September 28, 2011

நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டும் சீனா!

அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சவுதி அரேபியா சென்றுள்ளார். அதேநேரம், இஸ்லாமாபாத்திற்கு நேற்று வந்த சீன துணைப் பிரதமர் மெங் ஜியான்ஷூவூ , சீனாவின் முழு ஆதரவும் பாகிஸ்தானுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கிடையில், ஹக்கானி குழு மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

சவுதியில் பாஷா: அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சவுதி அரேபியா இவ்விஷயத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முயன்று வருகிறது. இதன் முதற்கட்டமாக, ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா நேற்று முன்தினம், திடீரென சவுதி அரேபியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பாக்.,கில் சவுதி உளவுக் குழு: அதேநேரம், சவுதி உளவுத் துறை அதிகாரிகள் குழு ஒன்று இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளது. ஆனால், அமெரிக்கா - பாக்., உறவுச் சிக்கல் குறித்து விவாதிக்கத்தான் அக்குழு வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ், பாஷா இஸ்லாமாபாத்தில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கத் தூதருடன் சந்திப்பு: இதற்கிடையில், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டருடன், பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் மார்க் ஸ்டோர்த், இது வழக்கமான சந்திப்பு என்று தெரிவித்தார். இந்த ஒட்டுமொத்த சந்திப்புகளும், ஒருபுறம் அமெரிக்காவை சமாதானப்படுத்த முயன்றுகொண்டே மறுபுறம், சீனாவுடனான தனது நெருக்கத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தும் பாகிஸ்தானின் முயற்சிகளாக நிபுணர்களால் கருதப்படுகிறது.

சீன துணைப் பிரதமர் சந்திப்பு: இந்நிலையில், நேற்று முன்தினம் சீன துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான மெங் ஜியான்ஷூவூ, இஸ்லாமாபாத் வந்தார். வெள்ள நிவாரணப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக, 250 மில்லியன் டாலர் மதிப்பில் இருதரப்பிலும் நேற்று முன்தினம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சீனாவின் முழு ஆதரவு: பயங்கரவாதத்துக்கு எதிராகவும், இந்த மண்டலத்தில் அமைதி நிலவவும் பாகிஸ்தானுக்கு சீனா தனது முழு ஆதரவையும் அளிக்கும் எனக் கூறிய மெங்,"இந்தாண்டு, சீனா, பாகிஸ்தான் உறவின் 60வது ஆண்டு. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன்' என்றார்.பாக்., அதிபர் சர்தாரி, ராணுவத் தலைமைத் தளபதி அஷ்பாக் கயானி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், ராணுவ தளபதி காலித் ஷமீம் வைன் ஆகியோரையும் மெங் நேற்று சந்தித்துப் பேசினார்.

அமெரிக்கா தீவிரம்: இதற்கிடையில், ஹக்கானி குழுவை பாக்., ஒழித்துக் கட்டியே தீர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் மற்றும் அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் இருவரும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத்தையொட்டி, நியூயார்க் சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சியைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பாகிஸ்தான் குறித்து அமெரிக்காவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பு ஒப்பந்தம்? பாகிஸ்தான், சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதில் தீவிரமாக இயங்கி வருவதாக பாக்.,கில் இருந்து வெளிவரும் "எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பீஜிங் சென்றிருந்த பிரதமர் யூசுப் ரசா கிலானி, இருதரப்பும் உடனடியாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா, இந்தியா உறவுகளில் சிக்கல் உருவாகும் எனக் கூறி சீனத் தலைமை அப்போதைக்கு கிலானியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டதாக, அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

"பாகிஸ்தானை நாங்கள் இயக்கவில்லை': அமெரிக்கா - பாக்., உறவுச் சிக்கல் குறித்து நேற்று தலிபான்கள் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா மண்ணைக் கவ்வியதில் இருந்து உலகைத் திசை திருப்ப, பாகிஸ்தான் மீது அமெரிக்கா புழுதிப் பிரசாரம் செய்து வருகிறது. பல்வேறு வழிகளில் பாகிஸ்தானில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்கிறது. அதன் மூலம், பாக்., அரசை பலவீனப்படுத்த நினைக்கிறது. ஹக்கானி குழுவை உருவாக்கிய ஜலாலுதீன் ஹக்கானி, எங்கள் மதிப்புக்குரியவர். நாங்கள் பாகிஸ்தானை இயக்கவில்லை. ஹக்கானி குழுவைத் தான் இயக்கி வருகிறோம்.இவ்வாறு தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி தினமலர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com