அவுஸ்திரேலியாவுடனான இலங்கையின் உறவு மேலும் வலுவுற்றுள்ளது
பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்த அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்மை இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள அத தெரண செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
"அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவரால் கடந்த 20ம் திகதி அவுஸ்திரேலிய பாராளுமன்றில் இலங்கைக்கு எதிராக கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இலங்கையை பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சில பொய் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்பட்டது, இந்த பிரேரணை நேற்று செனற் சபையால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது அரச தரப்பு அமைச்சர் ஒருவர் இந்த விடயம் தொடர்பில் இங்கு விவாதிக்கப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார். பின்னர் வாக்கெடுப்பு ஒன்றும் நடைபெற்றது. அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் அரச தரப்பினரும் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை. இதன் மூலம் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டநாள் நட்புறவு மேலும் வலுவடைவதாகவே நான் கருதுகிறேன்." என்றார் திஸர சமரசிங்க.
0 comments :
Post a Comment