Wednesday, September 21, 2011

குர்பான் கொடுத்தலை மேர்வினால் தடுக்க முடியுமா? - அலவி மௌலானா சவால்

கம்பஹா மாவட்டத்தில் இனிமேல் மாடு வெட்டக்கூடாது என அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்ததை தொடர்ந்து முஸ்லிம் அரசியல் வாதிகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். ஹஜ் பெருநாள் தினத்தில் முஸ்லிம்களால் கொடுக்கப்படும் குர்பான் கொடுத்தலை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் தடுக்க முடியுமா? என்று மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலாபம் முன்னேஸ்வரம் கோயிலில் அண்மையில் இடம்பெறவிருந்த மிருக பலியினை தடுத்து நிறுத்தியது போல் ஹஜ் பெருநாள் தினத்தில் முஸ்லிம்களால் கொடுக்கப்படும் குர்பான் கொடுத்தலை தடுத்தால் முஸ்லிம்கள் அமைதியாக இருக்காமல் வீதியில் இறங்கி போராடுவார்கள் என்றும் அலவி மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இது போன்ற செயற்பாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படும் வெளிநாட்டு சக்திகளுக்கு சாதகமாக அமைகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹஜ் பெருநாளின் போது குர்பான் கொடுப்பதற்காக மாடுகளை அறுப்பதற்கு பொலிஸார் எந்தவித தடைகளையும் விதிக்காதபடி பொலிஸ் திணைக்களம் சகல பொலிஸ் திணைக்களங்களுக்கும் சுற்று நிருபங்களை அனுப்பும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ உறுதியளித்துள்ளார்.

அதே போன்று தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் சமர்ப்பிக்கும் தொப்பி அணிந்த புகைப்படங்களுடனான விண்ணப்பங்களை ஏற்குமாறும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜய வீரவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ உத்தரவிட்டுள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும் இடையில் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்த்தபாவின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற சந்திப்பொன்றின் போதே பாதுகாப்புச் செயலாளர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment