Tuesday, September 20, 2011

கொஞ்சம் 'கூழ் ' பண்ணியபடி ….. எஸ். நஸீறுதீன்

தன்னைக் காப்பாற்றச் சொல்லி கூக்குரலிட்ட இளம்பெண்ணின் ஒலிகேட்டு ஓடிவந்த நிறைமாதக்கர்பிணிப் பெண்ணைக் கீழேதள்ளி வாளினால் கழுத்தைத் துண்டாடியபின், அவளின் வயிறைக்கீறி , உள்ளிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தெடுத்து (தொப்புள்கொடி பிய்ந்துவர) சுவரிலே மோதிக்கொலை செய்யும் கூட்டத்தை இன்னமும், என்னமாகத்தான்,'நெறி தவறாது,நீதிக்காகப் போராடிய படைஎனப் பேசுகிற சீமான், தாமரை, சேரன், அமீர், லீனா,,,,,, என்போரும் படைப்பாளிகள்தானா?
இதைப் படிப்பது ஓரளவு நல்லது என்று நினைக்கிறேன். கையிலுள்ளதாலும், வாயாலும் இதுவரை நெருப்பையும், செந்தணளையும் வீசி மூன்று சமூகமும் இதுவரை பெற்றதுபோதுமானால், எல்லோரும் இனியாவது படித்த, படிக்கிற பாடத்திற்கு ஒப்ப மிதமாயிருப்பதுதான் நல்லது. இது உபதேசத்தின் பொருட்டு வருவதல்ல: இன்னமும் இதையே சகித்துக் கொண்டிருப்பதுதானா எனும் ஆயாசத்தில் வருகிற பந்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நண்பர் சோலைக்கிளி அதீக், (மூன்று முறை அடுத்தடுத்து கவிதைக்காக சாகித்தியப் பரிசை வென்றெடுத்தவர். என்னிடம (அடிக்கடி, (நானும் கூடப் பட்டதாரியாயிருந்தும் ), 'இந்தப் பட்டம் சுமந்ததுகள்ள அலட்டல் தாங்க முடியாததாயிருக்கப்பா' எனச் சலித்துக் கொள்வதுண்டு. அவரின் பார்வையில் எனக்கும் ஒப்புவமை இருந்ததால் தர்க்கம் வந்து வீழ்ந்ததில்லை. நமது எண்ணத்துக்கும் நிகழ்கிற நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளமையால், அதில் சந்தேகங்களை இன்னமும் நான் கொண்டவனாகவே இருக்கிறேன்.

பாடசாலையின் பாடப்பரப்பு என்பதில் இந்த ' இலக்கியம் என்பது உட்படுமா?’ என்பதுவே அது. ஒருத்தரின் இலக்கியத்தரத்தை அளவிட, முன்னரேயுள்ள வேறு யாரினுடையதோ எண்ணப்பாட்டில், அல்லது வழிமுறையில் வந்த புள்ளி வழங்கும் அளவீட்டில், முன்னுள்ள ஆளுமைப் பண்புகளைத்தேடி 'விடைத்தாள்' வைத்துக்கொண்டு புள்ளியிடல் முறைமை இதற்கும் சரியான ஒன்றுதானா? இன்னமும் எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது. .

புத்தாக்கம் ஒன்று பழையதையும் தரித்தபடி புதிதானதென்று பேர்வாங்குவதெப்படி ?.,, ஆயினும படிப்பாளி, படைப்பாளி எனும் இரு சாராரும் வேறு வேறானவர்கள் என்பதை விளங்கப் பெரியஞானம் ஒன்றும் வேண்டியிருக்காது என்றே நம்புகிறேன்.

ஏற்கெனவே உள்ளதைப் பகுதி பகுதியாகப் பிரித்தெடுத்து, கோர்த்தெடுத்துப் பிரதிமை அல்லது நெட்டுருவில் அல்லது அப்பியாசத்தில் ஒவ்வொரு வருடமும் முந்திவருகிற முப்பதுகளுக்குப் பட்டம் கொடுக்கலாம்: படித்ததுக்குத் தக்கன வேலை கொடுக்கலாம் பதவி நிலையைச் சுட்டி . கௌரவத்தையும் கேட்டால் கொடுத்துப்பார்க்கலாம். ஏனெனில் பலாபலன்களை முன்னிட்டே(தொழில்,பணம்,அதிகாரம்,,,,) நாம் பார்க்கிற படிப்பாளிகள் இருக்கிறார்கள்.

பழக்க தோஷத்தில், வகுப்பிலுள்ள பிரம்பை எடுத்துக் கொண்டு, 'அடேய், யாரடாஅவன்? தோமஸ்அல்வாஎடிசனை, நியூட்டனை, ஐன்ஸ் தைனை விடப் பெரிய படைப்பாளி யாருளர்?' எனக் கேட்டுக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஒருபோதும். நீங்கள் சொல்கிறவர்கள் படிப்பாளிகளாக இருந்ததேயில்லை. அவர்களும் கூடப் படைப்பாளிகளே : இந்தப் பொழுது போக்குக்கும் அவர்கள் நேரமொதுககிப் பார்த்திருந்தால், தங்களையும் படிப்பாளிகள் எனச் சொல்வதைக் கேட்டு சினந்தெழக் கூடும். தங்கள் படைப்புக்காகவே தங்கள் அக, புற வாழ்வின் பெரும்பகுதிகளைச் சந்தோசமாகவே ஒப்புக்கொடுத்தவர்கள் அவர்கள் . இதை இன்னும் விரித்துச் சொன்னால், பெரும்பகுதி மக்களின் பார்வைக்குத் தெரிகிற சிலபைத்தியங்கள் எல்லோரையும்போல பணம், பதவி களின் பின்னே ஓடிக்கொண்டிருக்காமல், இசை, ஓவியம், எழுத்து, புத்தாக்கம் (அதுவே தவமாம் என்றும சொல்கிறார்கள்) என்பவற்றின் பின்னே, ‘வாழத்தெரியாததுகள்’ எனும் பட்டமும் வாங்கி வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் சொல்லலாமா? தங்களின் அகத்தேயான தேடலுக்காகவே வார்த்தையையும் வாழ்வையும் பணயம் பண்ணியவர்கள் அவர்கள் .

அதேநேரம் அவர்கள் தந்த எதுவும் இந்த உலகின் கண் இல்லாமலிருந்த ஒன்றல்ல. அது ஏற்கெனவே இங்கிருந்த ஒன்றுதான் மற்றைய யாரும் காணாதிருந்த ஒரு பார்வையை, கண்டுபிடிப்பை கண்டடைந்தவர் மறறவருக்காகப் பிரசவித்துத் தருகிறார். இதைக் காணாது ஓடிக் கொண்டிருந்தவரை, சற்று நிதானப்பட உட்காரவைத்து படையலிடடுப் பரப்பி விடுகிறார். இந்தத் தோற்றம் புதிதாயினும், ,அது படைப்பாக வெளியே பிரசுரமானதுமே அதன் மீதான அவனுக்குரிய உரிமையை, இன்பத்தை இழந்து போவதுடன், அந்த ஆக்கத்தைப் பொறுத்தவரை படைப்பாளி இறந்து போய்விடுவது -அந்தப் படைப்பைப் பொறுத்தவரை தவிர்க்க இயலாதது. படிப்பாளிக்கு இதுவெல்லாம் சரிவராத நியதிகள்.

படைப்பாளி பாரதி மாணவப் பருவத்தில் எழுதிய கவிதையை படிப்பாளி தமிழ் ஆசிரியர் தேர்ந்தேடுக்காமையும், பின்வந்த படைப்பாளிகள் 'அடடே,இதையா தேர்ந்தெடுக்கவில்லை' என அங்கலாய்ப்பதுவும் நாம்காண்கிற வரலாறு .'காணும் இடத்திலெல்லாம் காக்கைச் சிறகின் கருமை நிறத்தைக் காண்கிற’ அனுபவத்தைப் படிப்பாளி நம் பாடசாலைக் காலத்தில் விளங்கவைத்த, உண்மைக்கு அப்பாலான அகோரத்தனம் இன்னமும் காதில் நாகாராசமாய் ஒலிக்கிறது. உண்மையான . படைப்பாளிகள் இரசவாதிகள். வார்த்தைகள் இறந்து துருப்பிடித்தவைகள்தான். ஆனால்,அவர்களாலேயே, அழியாத் தங்கங்களாக அவ்வார்த்தைகளை மானிடருக்காக மாற்றித் தர முடிந்திருக்கிறது.

படைப்பாளிகளின் இடத்தைப் படிப்பாளிகள் கைப்பற்றியதனாலேயே, ‘ஈயடிக்கும் பிரதிமைகளின்' வரவு இத்தனை அதிகரித்துக் காணப்படுகிறது .கடந்த ஐந்து தசாப்தங்களாக கொழும்பு வளாகத்தின் பௌதிக பாடத்தின் பாடத்திட்டமும், வினாத்தாள் கொத்தும் மாறாதுள்ளதுபோலவே, மாற்றி மாற்றி அச்சடிக்கும் பிரதிகளையே நாம் அதிகம் காண இதுவே காரணம்.

படைப்பது வேறு, படி செய்வதுவேறு. படிப்பாளியைவிட படைப்பாளி பண்புகளிலும் மேம்பட்டவனாகவே இருக்க வேண்டும். மானிடத்தின் மீதான கரிசனையில், அவனின் பார்வைக் கோளாறைச் சரிசெய்ய, அவனின் வாழ்வைக் கொண்டாடுதலை, ஆன்மாவை கண்டடைதலை,,சக உயிரின்பாடுகளின் மீதான அனுதாபத்தை, அறம்சார் கேள்விகளினூடாக வாழும் ஆசையைச் சொல்பவனிடம் சகமனிதரிடம் அக்கறை மட்டுமே குடிகொண்டிருக்க முடியும்.

அதனால்தான்,எந்தப் பிரபல்யமான படைப்பாளியும் தன மனதுக்குத் துரோகம் செய்யாதவனாகவும், அவனின் படைப்புகள் மனித அன்பினூடு தோய்ந்து வருவதாகவும் அமைந்து விடுகிறது. கலைக்கென்றே தன்வாழ்வைக் கொடுத்து அதிலேயே இன்பம் காண்பதாகக் கூறிக் கொண்டாடுபவன் நேர்மையற்றவனாக இருத்தல் என்பது தன்விபச்சாரத்தை ஒத்தது :அவனது வாக்கும் வாழ்வும் வேறு வேறானது படிப்பாளி நேர்மையுள்ளவனாகத்தான் இருக்க வேண்டும் என யாரும் எதிர்பார்ப்பதில்லை. படைப்பாளி, படிப்பாளி இருவரையும் அப்படி எதிர்பார்க்கிறோமானால் மேற்கினரைப் பின்பற்றியதால் வந்த விளைவே இதுவும்கூட.

அதாவது, நம் தொன்றுதொட்டு இருந்துவந்த படிப்பு முறைமை யிலிருந்து நம் மன, அறிவு ரீதியிலான படிமத்தை நாம் இன்னமும் கழற்றிக்கொள்ளவில்லை என்றாகிறது . நம் பழையகாலக் கல்விமுறை குருகுலம் சார்ந்தது. கற்க வருகிறசிஷ்யன் ஊழியம் செய்வதுடன், தன்னை அடிமையாகவும்பிரகடனம் செய்பவனாயிருப்பான். ஒழுக்கம், மதம், பண்டைய மதங்கள், இலக்கியம்(இதிகாசங்கள்) போர்க்கலை... கற்றுத் தேர்ந்தவனாகித் தான் புறத்தேயும், அகத்தேயும் விடுதலை அடைந்து கொள்வதே பழங்காலக் கற்றலாயிருந்தது.

ஆதலால்தான் பாடசாலையில் பாடம் படிப்பிக்கிற வியாபார ஆசிரியரைக்கூட ஓரளவு மரியாதையாக நோக்கும் காலம் நம்புறத்தே இன்னமும் மீந்து காணப்படுகிறது. அண்மையில் இலண்டனில் ஏற்பட்ட நகரக் கடைஎரிப்பின்போது பிரதமர் கமருன், பாடசாலையில் ஒழுக்கத்தை வளப்படுத்த ஆசிரியர்களுக்கு பிரம்பு பாவிக்கும் உரிமையை வழங்கினால் நல்லது என அங்கலாய்த்தது, இன்றைய கல்விப் பாடப் பரப்பையும், போட்டிப் பரீட்சையையும் வைத்துக்கொண்டே கனவுகானத்தான் கமருன் இலாயக்க்கானவர் என்பதைத்தான் பறைசாற்றுகிறது.

நம்பக்கம் ஒருத்தர் ஏதாவது தகாதது செய்யின் அருகிலிருப்பவர் உடனடியாகவே கேட்பார் 'தம்பி எந்தப் பள்ளியில படிச்சது நீங்க?” என்று. அது ஒருகாலம். இப்போது உருப்போடப்பண்ணி, ஞாபகத்திலிருக்க (அதுவும் பரீட்சைவரை)வசம்பு தின்கிற காலமிது. இன்றைக்குப் படிப்பு என்பது பணம் பண்ணவும், காலத்தை இலகுபடுத்தவுமான ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. இந்தச் சிறு உதாரணத்தைப் பாருங்கள்: இந்திய மாநில நவாபுடன், வெளியே நாலுபேர்பார்க்கும்படியாக, உலாவரும்போது, பேச்சுத்துணைக்குக் கூட வந்தால் போதும், சம்பளம் வீடு தேடிவரும் என்றால், நமது படிப்பாளிகளால், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு கியுவில் நிற்க முடியும். பாரதியால், அதைச் செய்ய முடியவில்லை.

இந்திய சினிமாவில் கற்புப்படங்களைத் தருகிற ஷிரீதரைப போலவே, இலட்சிய கதாநாயகர்களைப் படைப்பாளியாகப்பிரசவித்துத் தந்த ஒருத்தர், நா.பார்த்தசாரதி. இவரின் மரணத்தின்போது, 'தன் வீட்டுவளவுக்கு இடைஞ்சல் என்று சொல்லி, அடுத்த வீடுக்காரனின் மரத்துக்கு சுடுதண்ணீர் ஊற்றியவர் இவர்' என்று சர்ச்சைப் பட்டார்கள். இந்தச் சுடுநீரைவிட, சீறிப்பாய்ந்து வரும் சுடுகிற இரத்தமயமாகிய இந்த சம்பவத்தைப் பாருங்கள். தன்னைக் காப்பாற்றச் சொல்லி கூக்குரலிட்ட இளம்பெண்ணின் ஒலிகேட்டு ஓடிவந்த நிறைமாதக்கர்பிணிப் பெண்ணைக் கீழேதள்ளி வாளினால் கழுத்தைத் துண்டாடியபின், அவளின் வயிறைக்கீறி , உள்ளிருக்கும் குழந்தையை வெளியே இழுத்தெடுத்து (தொப்புள்கொடி பிய்ந்துவர) சுவரிலே மோதிக்கொலை செய்யும் கூட்டத்தை இன்னமும், என்னமாகத்தான்,'நெறி தவறாது,நீதிக்காகப் போராடிய படைஎனப் பேசுகிற சீமான், தாமரை, சேரன், அமீர், லீனா,,,,,, என்போரும் படைப்பாளிகள்தானா? சிங்களக் கிராமத்தில் பிறந்து இராணுவத்தில் சேர்ந்தவன் (மொழியால் சிங்களம்) எவ்வித முன் விரோதமுமற்ற அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்த நிகழ்வை வீர வரலாறாகப் பேசிப்பேர்வாங்கிய சிங்கள இலக்கியவாதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர்களின் பிரபாகரன், யசோதா படங்கள் கூடப் போரினால் ஏற்பட்டமானிடச்சிதைவுகளைத்தானே பேசிக்கொண்டிருக்கின்றன. இதில் கூட நாம் கீழ்நிலைதானா?

வட கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் உயிரிழப்பு என்பதற்கும் அப்பால் மிகமுக்கியமான வாழ்வின் பொழுதுகளை அடகுவைத்தே வாழ்ந்த வாழ்வின் கொடூரம் மிக வன்மையான ஒன்று. அண்மைய காலங்களில் எழுதப்பட்டுள்ள, போரின் வடுக்களையும், அரசியலினூடு ஏழைச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வுகள் சூறையாடப்பட்டதையும் முதலாளித்துவ அகோர முகத்தையும் சிங்கள மொழியில் பேசிய அளவு தமிழ் எழுத்துக்கள் பிரசவிக்கவேயில்லை. இலங்கையில் அதற்கு ஒப்பிய அல்லது மேலான படைப்பாகத் தமிழ்மொழியில் தர ஆளில்லாமலுமில்லை. நாம் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை; எழுதவே அஞ்சிக் கிடந்த காலம் அது.

கடந்த மூன்று தசாப்தங்களிலும் சொல்லாது மூடிக்கிடந்த மனவாசல்களைத் திறக்கிறபோதே, புத்திக்கும் அப்பாலாகிய வாழ்வின் கண்டுபிடுப்புக்களை நாம் காணமுடியும். அன்புமயப்பட்ட மக்களாக நம் மக்களைக்கொண்டு செல்ல முடியும் . தன்புலமை, வித்துவத்தனம் அத்தனையையுமே பூமியின்கீழ், ஆழமாய்ப் புதைத்துவிட்டு, தன் இருப்பு ஒன்றிற்காகவே கிழக்கின் நாற்பதாயிரம் விதவைகளைப் பாட மறந்து, கருணா குழுவினரைக் கொன்றபோது எட்டப்பர் ஒழிப்பெனக்கோகர்ணர் படையலிட்டது படைப்பல்ல. இலக்கியம் தருபவன் இலக்கியவாதிக்குரிய ‘அடுத்தவர் நம்ப வாழ்வதுவும்’ அவசியமானதே. இதை வலிந்துதான் அவர்களில் வரவழைக்க வேண்டுவதாயிருக்க முடியாது. அவனின் இயல்பே அதுவாக மாறிவிட்டிருக்கும் என்றே நாம் எதிர்பார்ப்போம். மனம் கோணப் பேசுவதையே பக்கம்பக்கமாகப் பேசுகிறவன் அநியாயக்கொலையைக் கிலாகிக்கிறா னென்றால், அந்தப் புதுவை/மை,காசி எதுவுமே நம் மக்களை இனியும் சென்றடைய வேண்டாம்..

யாழ் பல்கலைக்கழகம் பற்றி போராட்டகாலத்தில் 'படிச்ச பொடியனுகள்' எனும் படிப்பாளிகள்பார்வை எப்படி ஆரம்பச் சுழியாக இருந்ததுவோ அதுவாகவே துணை வேந்தர் நியமனமும்தெற்காசிய அமெரிக்க நலன் சார் பிளேக்கின் வருகையையும் இலங்கையின் அடுத்த கரும் புள்ளியாக விழ ஆரம்பிக்கிற ஒன்றாகக் காண வேண்டியுள்ளது.

படிப்பாளியாகிய கூழின் பிரச்சினையில் இலக்கியம் பேசுவதாகப் பேர்பண்ணிக்கொண்டு திரிகிறவர்கள் தூக்கி ஆடுவது பழைய பழக்கதோசத்தினாலேயாகும். தயவு செய்து விலகி நில்லுங்கள். நம் மண் பிரசவித்து அநியாயமாகக் கொல்லக் கொடுத்த படைப்பாளி செல்வியின் வார்த்தையில் சொன்னால், 'இது உயரே நின்றுகொண்டு, படைப்பாளிகளைப் பார்த்துச் சொல்லப்படுகிற' ஒன்றல்ல. ஒரு சிறுபரப்பில் மூன்று இலட்சங்களாக அடைக்கப்பட்டிருந்து, கண்ணெதிரே சக உறவுகளின் கொலை, அங்க இழப்புக்களைத் தரிசித்து மீண்ட மக்களிடம் திணிக்கப்பட்ட வாழ்வின் அச்சத்திலிருந்தான விடுதலையை, உள்ளத்திலி ருக்கிற தகைப்புகளை போக்கி ஒழுக்கம் சார் மக்களாக மாற்ற மானிட நேசம் கொண்ட படைப்பாளிகளாலேயே முடியும். அவர்களின் விமோசனமே முக்கியமானது.

இந்தப் படிப்பாளிகள், தங்கள் தங்கள் பட்டம், பதவி, சில்லறை களுக்காக மோதிக் கொண்டிருக்கட்டும். சிங்கள ,தமிழ், முஸ்லிம் படைப்பாளி களாலேயே இதுவரை விதைக்கப்பட்டு ஊன்றிப்போயுள்ள 'அடுத்தவர் நரகம்' எனும் வாழ்வின் போக்கிலிருந்து, 'ஒன்றுபட்டாலே உள்ளது வாழ்வு' எனும் நிலைக்கு மக்களை மாற்றிவைக்க முடியும். அதற்கு மூன்றின முற்போக்கு (?) சக்திகளும் ஒன்றுபட்டு பொதுப்புத்தியில் இயங்கும் நிலை இனியாவது ஏற்பட முன்நிற்போம். இந்த நுற்றாண்டின் மிகப்பெரும் பணம் பிடுங்கும் தொழிற் துறையாக மருத்துவம் ஆகியுள்ளது எனும் கூற்றுப் போலவே இலங்கையின் இலக்கிய வீச்சும் ஆகாதிருக்கப் பிரார்த்திப்போம். VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com