த.தே.கூ உடனான அரசின் பேச்சுக்கு தே.தே.இ கடும் எதிர்ப்பு.
புலிக்குட்டிகள் நாட்டை கூறுபோட முயற்சிக்கின்றன
ஐ.நாவின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நாடு திரும்பியுள்ள நிலையில் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தி வரும் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புலிக் குட்டிகளான கூட்டமைப்புடன் நடத்தி வரும் பேச்சுக்களை உடன்நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.
தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படவேண்டும் என்பது தொடர்பாக உதயனுக்கு விவரிக்கையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு நாட்டைக் கூறுபோடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இவர்கள்தான் புலிகளின் ஏகப் பிரதிநிதிகள் என்பதைப் புரிந்துகொண்டு அரசு செயற்படவேண்டும். புலிகளின் அனுசரணையுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி புலிகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிக்குட்டிகளுடன் பேச்சுகளை அரசு தொடரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.
தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும். ஆரம்பம் முதலே நாம் இதனையே வலியுறுத்தி வருகின்றோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எவ்வாறு வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பாக சிங்கள மக்களின் கருத்துகளை அரசு முதலில் கேட்டறிய வேண்டும். அதன் பின்னரே, ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று நாம் கூற வரவில்லை. நாட்டை கூறுபோட முனையாத, அதேபோன்று தேசப்பற்றுடனும் இதயசுத்தியுடனும் செயற்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்குமாறே வலியுறுத்துகின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment