Friday, September 30, 2011

பொலிஸ் பொதுமக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். கோத்தா

பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையிலான தொடர்புகள் இன்று அன்னியப்பட்டுள்ளன அவற்றை சீர்செய்வதாயின் மீண்டும் சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ரோயல் கல்லூரியின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழக்ளுடனான சந்திப்பின் போதே பாதுகாப்பு செயலர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குற்றமற்றதும் பாதுகாப்பானதுமான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் இன்று ஆசியாவிலே தூய்மையான நகரம் என்றால் அது இலங்கையின் கொழும்பு நகரம்தான். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிசாரினால் மட்டும் முடியாது பொதுமக்களின் பங்களிப்பு இதற்கு அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் தமது பிரதேசங்களில் ஏற்படும் குழப்பசூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை பொலிஸாருடன் இணைந்து தீர்த்துக்கொள்ளம் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், 30000 வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் இங்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com