சிறைக் கைதிகளை நூதன முறையில் சித்ரவதை செய்யும் இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.
இதுகுறித்து மென்டிலா அரசியல் கைதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ஷின் பெட், கைதிகளை மனம் மற்றும் உடல் ரீதியான நிலையில் கொடுமைப்படுத்துகிறது. வெளிகாயங்களோ, தடயங்களோ தெரியாத நிலையில் அவர்களது கொடுமைகள் உள்ளன. கால்களை சேர்த்து கட்டிய நிலையில் குனிந்த நிலையில் கைகளை கொண்டு உட்கார செய்தல், கழிவறைகளில் பல மணிநேரங்கள் நிற்க வைத்தல், கூண்டிற்குள் போட்டு உறங்கவிடாமல் அதை குலுக்கிக் கொண்டே இருத்தல் ஆகிய கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது.
கொலை மிரட்டல், கற்பழிப்பு, வீட்டின் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரின் முகத்தை அழுக்கு சாக்குகளை கொண்டு மூடி விட்டு, குளிர்சாதன பெட்டிகளில் வைக்கின்றனர். தனிமைச் சிறையில் உட்கார இடமில்லாமல் பலமணிநேரம் தனிமையில் நிற்கவிடுதல் ஆகிய கொடுமைகளை செய்கிறது இஸ்ரேல் அரசு.
இதனால் மனம் மற்றும் உடலளவில் கைதிகள் கடும் பாதிப்பை அடைக்கின்றனர். சிலர் மனநோயாளிகளாகவும் மாறிவிடுவதாக தெரிகிறது. மேலும் சில கைதிகளுக்கு கழிவறையை பயன்படுத்தவும் கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாலஸ்தீன அரசின் புள்ளியியல் கணக்குபடி இஸ்ரேல் நாட்டில் உள்ள 23 சிறைகளில் 7,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் 18 வயதிற்கும் குறைவானவர்கள்.
மேலும் 37 பெண்களும், 17 பாலஸ்தீன சட்டசபை உறுப்பினர்களும் இதில் உட்படுவர். 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் அளிக்கப்படும் கொடுமைகளாலும், தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாததாலும் இறந்ததாக தெரிகிறது என அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
0 comments :
Post a Comment