Thursday, September 8, 2011

போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கையருக்கு இந்தியாவில் 8 வருட சிறைத்தண்டனை.

இந்தியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு 6 வருட விசாரணைகளின் பின் நேற்றைய தினம் 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் இருவர் உட்பட இலங்கை ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜி.ஜெயந்தி (வயது 46), மற்றும அவரது மகன் ஜெகன் (26) இருவரும் 13.12.2005 அன்று வெவ்வேறு பெயர்களில் பயணம் செய்தனர். அந்த ரயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றதும் சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது ஜெயந்தி, ஜெகன் ஆகியோரின் உடமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர்.

அதன்போது, பொலுத்தீன் பைகளில் வெள்ளைநிறப் பௌடர் அடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சோதனை செய்ததில், அவை ஹெராயின் என்ற போதைப்பொருள் என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயந்தி, ஜெகன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், போதைப்பொருளை இலங்கையைச் சேர்ந்த சிவபாலன் மற்றும் நந்தேஷ்னா ஆகியோரிடம் கொடுக்க இருந்ததாகவும், அதை அவர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து சிவபாலனையும், நந்தேஷ்னாவையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி முகமது ஜபருல்லாகான் நேற்றையான இந்த வழக்குத் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையை அடிப்டையாகக் கொண்டு தீர்ப்பளித்தார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஜெயந்தி, ஜெகன், சிவபாலன் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

நந்தேஷ்னா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதை அடுத்து அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com