6ம் மாடியிலிருந்து தள்ளி வீழ்த்தப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பான விசாரணகள் ஆரம்பம்
நீர்கொழும்பு வைத்திய சாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மரணமான யுவதியின் வழக்கு நவம்பர் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் மரணமான ஆடைத்தொழிற்சாலை யுவதி சர்மிளா திசாநாயகவின் வழக்கு நேற்று நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட போது இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன ஒத்திவைத்ததுள்ளார்
இந்த வழக்கின் சந்தேக நபரான வைத்திய சாலையில் வைத்தியராக பணியாற்றிய வைத்தியர் சுதர்சன் பாலகேயின் சார்பில் சட்டத்தரணி அனுர்ஜ பிரேமரத்ன மன்றில் ஆஜராகியிருந்தார். சம்பவத்தில் இறந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்று சட்டத்தரணி மன்றில் எடுத்துரைத்தார். இதனை அடுத்து நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியின் அற்க்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினத்திற்கு இந்த வழக்கை விசாரணைக்காக ஒத்திவைத்தார்.
அத்துடன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்த தொடர்ந்து விசாரணை செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீர்கொழம்பு மாவட்ட வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து சுதந்திர வர்த்தக வலய ஊளியரான சமிளா திசாநாயக மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யும் நோக்கில் கீழே தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரான வைத்தியர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
சம்பவம் தொடர்பான மீள்பார்வை.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் யுவதி ஒருவர் வைத்திய சாலையின் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் 12-11-2007 அன்று மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ (32 வயது) என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை அடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன் வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
வைத்தியரின் அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன.
பின்னர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதேவேளை, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி 15-11-2007 அன்று நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
கொலை செய்யப்பட்ட யுவதி பணியாற்றிய தொழிற்சாலை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாகவும் வந்தனர். 16-11-2007 அன்று யுவதியின் பூதவுடல் கட்டான பிரதேசத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்ட்டது. பின்னர் யுவதியின் சொந்த ஊரான மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு 17—11-2007 அன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
இதேவேளை, சந்தேக நபரான வைத்தியர் 16—11-2007 அன்று சிறைச்சாலையில் வைத்து தனது காற்சட்டை நாடாவை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயன்றார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையில் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் யுவதியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 19-11-2007 அன்று யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு பொலிசாரால் சமர்பிக்கப்பட்டது. ராகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சீல் வைக்கப்பட்டு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு நீதிவான் பிரபாத் ரணசிங்க உத்தரவிட்டார்.
27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.
சந்தேக நபருக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமும் அன்றைய தினம் இடம் பெற்றது.
இதேவேளை, 5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து )கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படு்த்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். சந்தேக நபரான வைத்தியரை தொடரந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ரேட் உத்தரவிட்டார்.
பின்னர் இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது யுவதியின் மரணத்திற்கான காரணம் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது. மேலிருந்து கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பும் முள்ளந்தண்டு எலும்பும் முறிந்ததாலும் மண்டையோடு சிதைந்ததாலும் உள்ளே இரத்தம் கசிந்ததாலும் ஏற்பட்ட மரணம் என நீதிபதி தீர்ப்பளித்தார். யுவதியின் கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். இவ்வாறு பலதடவைகள் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
15-09-2008 நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த சந்தேக நபரான வைத்தியர் 24-09-2008 அன்று இரண்டாவது தடவையாகவும் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
வைத்தியரின் மனைவி அக்காலப் பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்ககை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, இவ் வழக்கினை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு மேலதிக மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
பின்னர், இக் கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிவானால் உத்தரவிடப்பட்டார்.
விசாரணை தொடர்ந்து இடம் பெற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு இரண்டு ஆண்டு காலமாக (2009 ஆம் ஆண்டு வரையில்) இடம்பெற்று வருவதும், இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நீண்டகாலம் எடுத்தமையும் பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீதி காப்பாற்றப்படுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!
படவிளக்கம்-
படம் 1 - கொலை செய்யப்பட்ட யுவதி
படம் 2- நீர்கொழும்பு வைத்தியசாலை
படம் 3- கற்பழிப்புச் சம்பவம் நடந்த அறை
படம் 4,5,6 - மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட யுவதியின் உள்ளாடைகளும் பொருட்களும் மற்றும் சாட்சியங்களும்
படம் 7,8- நீதவான் வைத்தியசாலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள காட்சி
படம் 9,10,11,12 - நீதிகோரி ஆர்ப்பாட்டம்
படம்-13 சமிலா திசாநாயக்கவின் பிரேதம்
படம் 14,15 – வைத்தியர் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சி
படம் 16- சந்தேக நபரான வைத்தியர் தனது மனைவியுடன்
0 comments :
Post a Comment