இளவயதில் பிரிந்த காதல் ஜோடி 65 வருடங்களின் பின் சந்தித்து திருமணம்
சிறுவர்களாக இருந்தபோது மனமொத்த காதலர்களாக விளங்கிய ஜோடியொன்று 65 வருடங்களின் பின் இணையத்தளம் மூலம் ஒருவரையொருவர் கண்டுபிடித்து திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. மணமகளான மேரி லைனெசும் (81 வயது) மணமகனான ஜோன் அகிங்சும் கடந்த சனிக்கிழமை சுமார் 200 உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மேற்கு ஜோர்க்ஷியாரிலுள்ள கெயிக்லிபாலரிஸ் தேவாலயத்தில்திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இவர்கள் இருவரும் முதன்முதலாக தமது 7 வயதில் சந்தித்து கொண்டனர். அதன்பின் 15 வயதுவரை அவர்களிடையே காதல் மலர்ந்தது. ஆனால் அக்காதல் கனிவதற்கு இடையில் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது. இதனையடுத்து மேரியும் ஜோனும் வேறு துணைகளுடன் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
அண்மையில் மேரியின் பிறந்தநாளின் போது அவருக்கு மடிக்கணனி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது முதல் காதலரான ஜோன் அகிங்ஸ் அவரை அடையாளம் கண்டு அவருக்கு இலத்திரனியல் அஞ்சலை அனுப்பி வைத்தார் வாழ்க்கை துணைகளை இழந்து தனிமையில் வாடிய மேரிக்கும் ஜோனுக்குமிடையில் காதல் மீளவும் துளிர்விட்டது அவர்கள் திருமணம் செய்வதற்கான திட்டத்தை பிள்ளைகளிடம் தெரிவித்த போது அவர்கள் மகிழ்ச்சியுடன் அதற்கு ஆதரவளித்தனர். மேரியின் மூத்த மகளான ஜக்கி ஸ்மித்துக்கு 52 வயதாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திருமணம் தொடர்பில் ஜோனும் மேரியும் விபரிக்கையில் நாம் தற்போது எம்மை 21 வயது இளைஞனும் யுவதியும் போல உணர்கின்றோம். நாங்கள் 100 வயதுவரை இணைந்து வாழப்போகின்றோம் என அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். தற்போது இந்த ஜோடி தேனிலவுக்காக ஸ்கொட்லாந்துக்கு சென்றுள்ளது.
0 comments :
Post a Comment