சொத்து ரூ.6.33 லட்சம் கோடி அமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்
அமெரிக்காவின் முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.161 லட்சம் கோடி. உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டியலை பொருளாதார இதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் அமெரிக்க முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில் 400 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் ரூ. 6.33 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ. 44,776 கோடி உயர்ந்தது. ரூ.3.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பப்பெட் 2வது இடம்பெற்றுள்ளார். நிதி முதலீட்டு குழுமத்தை நடத்தி வரும் அவரும், பில் கேட்சும் ஒன்றாக இணைந்து உலக அளவில் சமூக நல திட்டங்களுக்கு அதிக நன்கொடை அளித்து வருகின்றனர்.
அத்துடன், கடந்த ஆண்டைவிட தனது வருமானத்தை பப்பெட் பெருமளவு குறைத்துக் கொண்டதால் அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் 20 பேரைவிட முதல் முறையாக குறைவாக வரி செலுத்தினார். கடந்த ஓராண்டில் பப்பெட் சொத்து மதிப்பு ரூ.62,686.5 கோடி அதிகரித்தது.
ரூ.3.31 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் ஆரக்கிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி லேரி எலிசன் 3ம் இடத்தில் இருக்கிறார். பைனான்சியர் ஜார்ஜ் சாரோஸ் ரூ.221,641 கோடி சொத்து மதிப்புடன் 7ம் இடமும், பேஸ்புக் சமூக இணைப்பு இணைய தள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ரூ.188,099.7 கோடியுடன் 14வது இடமும் வகிக்கின்றனர். அமெரிக்க கோடீஸ்வரர்கள் 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.161 லட்சம் கோடி என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment