Thursday, September 15, 2011

46.2 மில்லியன் அமெரிக்க மக்கள் வறுமையில் வாடுகின்றனர்

கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவாக 46.2 மில்லியன் அமெரிக்க மக்கள் வறுமையில் தவிக்கின்றனர். அமெரிக்காவில் ஆறில் ஒருவர் ஏழ்மை நிலையில் உள்ளார். வாஷிங்டன்: 2009ம் ஆண்டில் அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை 14.3 விழுக்காடக இருந்தது. ஆனால் இவ்வெண்ணிக்கை 2010ம் ஆண்டில் சற்றே அதிகரித்து 15.1 விழுக்காடாக மாறியுள்ளது.

ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை கணக்கிடுகையில் சென்ற ஆண்டை விட அமெரிக்காவில் குறிப்பாக கறுப் பினத்தவர், மற்றும் ‘ஹிஸ்பானிக்’ இனத்தை சேர்ந்த மக்களிடையே வறுமை நிலை 26.6 விழுக்காட்டில் இருந்து 27.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வறுமையின் தாக்கம் அந்நாட்டு இளையர்களையும் விட்டுவைக்க வில்லை. அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட வர்களில் 22 விழுக்காட்டினர் வறுமையில் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது 2009ம் ஆண்டு 20.7 விழுக்காடாக இருந்தது.

வட்டார அளவில் பார்க்கையில் அமெரிக்காவின் தெற்குப் பகுதியே வறுமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆக அதிக ஏழை மக்களை கொண்ட மாநிலமாக ‘மிஸிஸிப்பி’ உள்ளது. அந்த மாநிலத்தில் 22.7 விழுக்காடு மக்கள் ஏழைகளாக உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் லூயிஸியானா, டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா, ஜார்ஜியா, நியூ மெக்சிகோ, அரிஸே„னா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதனிடையே அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் சீர்திருத்தம் கொண்டு வரும் புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டுள்ளார் அதிபர் ஒபாமா. இதற்கான வரைவு மசோதா இவ்வார தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களவையில் ஒபாமா தாக்கல் செய்துள்ள இந்த மசோதா சட்டமானால் புதிய வரிகள் மூலம் $400 பில்லியன் அரசுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி நபர்களும், எண்ணெய், இயற்கை வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் புதிய வரிகளைச் செலுத்துவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.

ஆனால் இந்த மசோதாவுக்கு குடியரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒபாமா தாக்கல் செய்துள்ள இந்த மசோதா சட்டமாவதில் சிக்கல் எழும் என்று தெரிகிறது.

இதனிடையே இது குறித்து கருத்துரைத்த ஒபாமா “நாட்டின் முக்கிய தேவையான வேலை வாய்ப்பு விஷயத்தில் குடியரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. “நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு 9 விழுக்காடாக இருக்கும் நிலையில் இந்தப் புதிய மசோதா மூலம் அதை தீர்க்க முடியும். “குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்தே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. “இதை காங்கிரஸ் நிறைவேற்று வதுதான் முறையாக இருக்கும். இதில் தாமதம் ஏற்படக்கூடாது”, என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment