பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்
ஓய்வுபெற்ற சிரேஷ்டபொலிஸ் அதிகாரி ஒருவருடைய வீட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை ,பணம், மற்றும் மாணிக்கக் கல் என்பவற்றை திருடிய சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யபட்ட தம்பதியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை ,பணம், மற்றும் மாணிக்கக் கல் என்பவற்றில் ஒரு பகுதியை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்ளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமசிறி லியனகே நேற்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டபோது சாட்சிகள் மூவரால் அடையாளம் காட்டப்பட்டார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரினர்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மிரிஹானை விஷேட குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொயிசா முன் பிணை வழங்குவதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்தவேண்டிய பொலிஸார் தவறு செய்துள்ளதாகவும்,சந்தேக நபர்களினால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு பிணை வழங்கினால் சாட்சிகள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படலாம் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொயிசா மன்றில் தெரிவித்தார்.
விசாரணைகள் இன்னும் நிறைவடையாததன் காரணமாக பிணை வழங்க முடியாதென தெரிவித்த நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன் சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடுத்த வழக்கு தினத்தில் விசாரணைகளை நிறைவு செய்து மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment