Monday, September 26, 2011

லிபியாவில் கடாபி அரசால் கொல்லப்பட்ட 1,270 பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் ராணுவத்தால், கடந்த 1996ம் ஆண்டு கொல்லப்பட்ட 1,270க்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் திரிபோலியில் உள்ள அபுசலீம் சிறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லிபியாவில் முன்னாள் அதிபர் கடாபியின் கொடுங்கோல் ஆட்சி ஒழிக்கப்பட்டு, தற்போது தற்காலிக ஆட்சி நடந்து வருகிறது. லிபியாவில் விரைவில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளது.

இடைக்கால அரசின் அதிகாரிகள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது தலைநகர் திரிபோலியில் உள்ள அபுசலீம் மத்திய சிறையில் பல மனித எலும்புக் கூடுகள் ஒரிடத்தில் குவிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 1996ம் ஆண்டும் முன்னாள் அதிபர் கடாபி லிபியாவின் ஆட்சியை பிடித்த போது, அவரை எதிர்த்து நின்ற ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களும் 2002ம் ஆண்டு வாக்கில் கொல்லப்பட்டிருக்கக் கூடும், அவர்களின் எலும்புக் கூடுகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அபு சலீம் சிறையில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதுவரை 1270 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன.

இதுகுறித்து மருத்துவ அதிகாரியான டாக்டர் ஒஸ்மன் அப்துல் ஜலீல் கூறியதாவது, 1,270க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்புகளை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டெடுக்கப்பட்டவர்களின் உறவினர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கண்டெடுக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம், என்றார்.

கடாபியின் குடும்பத்தினரை பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பெருமளவில் எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டிருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com