டெல்லி உயர் நீதிமன்றம் அருகே குண்டுவெடிப்பு - 11 பேர் பலி
பாக். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகி உள்ளனர். 65க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எப்போதும் பரபரப்புடன் காணப்படும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் 5வது நுழைவு வாயில் அருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
பலத்த சத்தத்துடன் இந்த குண்டுவெடித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்தும் காவல்துறையினர் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார் என்று தெரியவில்லை.
தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாக். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி(ஹியூஜி) தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அந்த இயக்கம் சார்பில் அனுப்பியுள்ள இ மெயிலில்" டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்.
அப்சல் குருவுக்கு ( டெல்லி நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி) விதிக்கப்பட்ட மரணத்தண்டனையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இதனை செய்யாவிட்டால் இந்தியாவிலுள்ள முக்கிய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் நாங்கள் தாக்குதலுக்கு குறிவைப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ-வின் தலைவர் சின்ஹாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,குறிப்பிட்ட அந்த இ மெயிலின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்துகொள்ளும் முன்னர் அது குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பதிலளித்தார்.அதே சமயம் அந்த இ மெயிலில் குறிப்பிட்டுள்ள விடயத்தை தாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment