லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு ஆதரவு தொடரும்: ஒபாமா உறுதி
லிபியாவில், இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அறிவித்துள்ளார். இந்நிலையில், கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த சபா நகரின் பெரும்பகுதி எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டது. இடைக்கால அரசின் பிரதிநிதிகளுடன், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று 66 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் லிபியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய லிபியா இடைக்கால அரசின் பிரதமர் மகமது ஜிப்ரீல்,"எத்தனை அமைச்சகங்கள், டிரிபோலி மற்றும் பெங்காசியில் எந்தெந்த அமைச்சகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், இன்னும் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்' என அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, லிபியா இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா ஜலீல் தலைமையிலான லிபியா பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். டிரிபோலியில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என அவர் உறுதியளித்தார். லிபியாவின் முன்னேற்றத்திற்கு, ஐ.நா., மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து, அமெரிக்காவும் உதவும் எனவும் அவர் கூறினார். அதன்பின் பேசிய ஜலீல், லிபியாவின் புதிய அரசுக்கு ஆதரவளித்த சர்வதேச சமூகம் மற்றும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இதுவரை லிபியாவின் இடைக்கால கவுன்சிலை கடுமையாக விமர்சித்து வந்த ஆப்ரிக்க யூனியன், அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்தது. அதேபோல், தென் ஆப்ரிக்காவும் இடைக்கால கவுன்சிலுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், "கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த லிபியாவின் முக்கிய நகரமான சபாவின் பெரும்பகுதி, நேற்று எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்டது. நகரின் மையப் பகுதியில் எதிர்ப்பாளர்கள் முகாமிட்டுள்ளனர். எனினும், நகரின் பிற மாவட்டங்களில் கடாபி ஆதரவாளர்களின் தாக்குதல் இருந்து வருகிறது. விரைவில் அந்நகர் எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விடும்' என இடைக்கால கவுன்சில் நேற்று அறிவித்தது. எனினும், சிர்ட், பானி வாலித், ஜுப்ரா நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
...............................
0 comments :
Post a Comment