Saturday, September 17, 2011

10 வருட சிறைவாசத்தின் பின் புலி சந்தேகநபருக்கு விடுதலை

பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரிடம் இவர் கொடுத்திருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்த வெடிப்பொருட்களை சேகரித்ததாக குற்றம்சாட்டி சந்திரகுமார் ராபர்ட் புஷ்பராஜன் என்பவர் 2000ஆம் ஆண்டு நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாருக்கு இவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இவருக்கு எதிரான சாட்சியமாக வழக்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வாக்குமூலம் இவர் தன்னிச்சையாக வழங்கியதுதான் என நிரூபிக்க அரச சட்டவாதி தவறிவிட்டதாக மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபரிடமிருந்து வெடிப்பொருட்கள் பலவற்றைக் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர். ஆனால் அதனை சாட்சிகள் மூலம் நிரூபிக்க பொலிஸார் தவறிவிட்டதாகவும் நீதிபதி சுனில் ராஜபக்ஷ் குறிப்பிட்டிருந்தார்.

குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், புஷ்பராஜன் விடுவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com