அமெரிக்காவை குறிவைக்கும் ஐரீன் சூறாவளி!
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஓரிரு நாட்களில் “ஐரின்” சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதென அமெரிக்க தேசிய சூறாவளி மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அட்லான்டிக் கடலில் உருவாகியுள்ள சூறாவளியான ஐரின், கரீபியன் தீவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய நிலவரப்படி பஹாமஸ் தலைநகர் நசாவுக்கு கிழக்கு வடகிழக்கில் 65 மைல் தொலைவில் (நியூயார்க்கிலிருந்து 1000 கி.மீ.) மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்படி, ஓரிரு நாளில் அமெரிக்காவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை பகுதியில் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என்றும், கடலில் ராட்சத அலைகள் உருவாகும் என்றும் சூறாவளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வடக்கு கரோலினா மற்றும் நியூயார்க் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment