Saturday, August 13, 2011

புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதன் விளைவை முள்ளிவாய்காலில் சந்தித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதே தவறை செய்தால் அதன் விளைவை தமிழ் மக்கள் எங்கு சந்திப்பர்? -எம் இஸட் .ஷாஜஹான் B.Ed

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த எட்டு மாத காலமாக இடம் பெற்று வந்த பேச்சுவார்த்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு விடுத்துள்ள காலக்கெடுவை அடுத்து பேச்சுவார்த்தை கேள்விக்குரியாகியுள்ளது.

இரு தரப்பினர்க்கும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முடக்க நிலையானது நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இறுதி யுத்த்த்திற்கு முன்னர் இலங்கை அரசு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அது இணக்கப்பாடு காணப்படாமல் முறிவடைந்தது. அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையும் இடை நடுவில் முறிவடைந்து விடுமா? என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை யுத்தத்தின் மூலமாகவோ பேச்சு வார்த்தை மூலமாகவோ விடுதலை புலிகளால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. உயிர் பலிகளும் , அவலங்களும் , இழப்புக்களுமே எஞ்சின என பல தரப்பினராலும் புலிகளுக்கு எதிராக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

அன்று பலம் வாய்ந்த நிலையில் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது ,அவர்கள் பேச்சு வார்த்தையிலிருந்து விலகியமைக்கு அவர்கள் பலமான நிலையில் இருந்தமையும் ஒரு காரணமாக இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் இடம் பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று வடபகுதி தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுள்ள பலமான நிலையில் இம் முறை பேச்சு வார்த்தை ஆரம்பமாகியது. அதுவும் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

பேச்சு வார்த்தைளை இழுத்தடிக்காமல் அதிகார தீர்வு குறித்து பத்து நாட்களுக்குள் அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்று கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.

ஆட்சி அதிகார முறைமை, மத்திய –மாகாண அரசிற்கும் இடையிலான பங்கீடுகள் ,அவற்றின் செயற்பாடுகள், வரி , நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தனது முன் மொழிவுளை எழுத்து மூலாமக தரவேண்டும் என்று கூட்டமைப்பு கேட்டுள்ளது.

தேர்தல் வெற்றி , இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தம் போன்ற விடயங்களை தமக்கு சாதகமாகவும் தமது பக்க பலமாகவும் வைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை விடயத்தில் இம் முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ள முயற்சிக்கின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விதித்துள்ள கால அவகாசமானது தேசிய பிரச்சனைக்கு தீர்வினை எட்டுவதற்கு உதவிக்கரமாகவோ சாதகமான பெறுபேறுகளை அடைவதற்கான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளாவோ அமையும் என தாம் எண்ணவில்லை என்று அரசதரப்பு பேச்சுவார்த்தை குழுவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட செயல்களுக்கு ஒத்ததாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசுடன் பேசித்தான் எமது மக்களுக்குத் தேவையான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதை உணர்ந்துத்தான் நாம் அரசாங்கத்தோடு வெளிப்படையாகவே கைக்கோர்த்து இணக்கமாகப் பேசி மக்களுக்காக வாதாடியும் உண்மைகளை எடுத்துரைத்தும் வருகிறோம். தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்ப்பதற்கு மாறாக அதை வைத்து எமது இன சமூகத்தின் இரத்தங்களை சூடேற்றி வாக்குகளை மட்டும் அபகரித்து வருவதும், தேர்தல் காலங்களில் பொய்களும் புரட்டுகளுமாக பரப்புரை செய்து எமது மக்களை தவறாக வழி நடத்தி ,அவர்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஆணையை பெற்றுவிட்டதாக பெருமிதம் கொள்வதுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலாக இருந்து வருவதாக அதன் தலைவர் இரா சம்பந்தனை நோக்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கட்சியின் சார்பில் அறிக்கை விடுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மேசையில் அரச தரப்பினர் நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளவில்லை எனவும் பேச்சுவார்த்தை விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசரப்படவில்லை எனவும் அரசாங்கம் இனப் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்காகவே என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடும்போது, கடந்த கால வரலாறுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்குரியனவாகவே இருக்கின்றமையால் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை தொடர்பில் நிபந்தனை விதித்திருக்கலாம் எனவும் அதனை காரணம் காட்டி பேச்சுவார்த்தை முறிந்துவிடாமல் அது குறித்து ஆராய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமும் கூட்டமைப்பின் நிபந்தனயை காரணம் காட்டி அந்தக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை முறித்துவிடாது என தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடுலைப் புலிகள் பலம் வாய்ந்த நிலையில் இருந்தபோது பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியதன் பின்னர் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு புலிகள் ஒழிக்கப்பட்டனர்.

இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது நிபந்தனை விதித்திருப்பது புலிகள் செய்த அதே தவறை செய்வதற்காகவா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யுத்தத்தில்அரசாங்கம் வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை அது வெற்றி கொள்ள வேண்டி இருக்கிறது. சமாதானத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் இரு தரப்பினரும் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு வெளிப்படைத் தன்மை , விட்டுக் கொடுப்புக்கள்,நல்லிணக்கம் போன்றன அவசியமாகிறது. சமாதானத்தை தனித்து பெறமுடியாது. பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடியாக நிபந்தனைகள் விதித்திருப்பது எதற்காக?

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணசேகர அமரசேகர பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளதன் பின்னணியில் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளுமே உள்ளன. அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கூட்டமைப்பு செயற்படுகிறது. புலிகளின் வாலான கூட்டமைப்பின் சலசலப்புக்குக்கெல்லாம் அஞ்சவேண்டிய அவசியமில்லை என்று குறிப்புட்டுள்ளார்.

தமக்கிடையே பிளவுபட்டிருக்கும் தமிழ் கட்சிகளும் தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களுக்காக ஒன்று சேர வேண்டும். விடுலைப் புலிகள் செய்த தவறை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யக் கூடாது.



1 comment: