மட்டக்களப்பில் ஊடகவியளாளர் மீது தாக்குதல்.
மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளார்கள் என்பது தொடர்பில் ஏற்பட்ட பதற்ற நிலையின்போது அங்கு செய்தி சேகரிக்கச்சென்ற சுயாதீன ஊடகவியலாளர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுயாதீன ஊடகவியலாளரான ஜவ்பர்கான் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது கமராவும் பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கமராவுக்குள் இருந்த கசட்டும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளரால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் நிலைமையினை கட்டுப்படுத்தி குறித்த குழுவினரிடம் இருந்து கமராவை பெற்றுக்கொடுத்துள்ள போதும் இதுவரையில் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட கசட் கிடைக்கவில்லையென குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் காரணமாக தமது பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியாத நிலையை தோற்றுவிக்கும்.
உண்மைத் தன்மையை வெளிக்கொணர அயராது பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான தாக்குதல் எதிர்காலத்தில் மட்டக்களப்பில் இடம்பெறும் சம்பவங்கள் மூடிமறைக்கப்படக்கூடிய நிலையை தோற்றுவிக்கும் என ஊடகவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான ஊடகவியளாளர் தெரிவித்தார்.
ஜீனைட்.எம்.பஹத்
0 comments :
Post a Comment