Wednesday, August 17, 2011

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் குளிர் காய்வது யார்?

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவிவரும் உட்பூசல் சந்திக்கு வந்துள்ளதுடன் கட்சியின் அந்தரங்க விடயங்கள் பலவும் பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இன்று மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும். இன்று இடம் பெற்ற சம்பவங்கள் அவ்வாறு அமைந்துள்ளன.

ஊட்கட்சியினுள் நிலவிவரும் பிணக்குகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு இன்று கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் அதன் மத்திய குழு உட்பட்ட பிரதானிகள் கூடவிருந்த சந்தர்ப்பத்தில், கட்சியின் தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கி நிற்கும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிறேமதாச தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்த ஏற்பாடாகியிருந்தது.

இவ்வார்பாட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மிரிகாண பொலிஸ் புலனாய்வத்துறையினர் நீதிமன்றினை நாடினர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அருகில் இன்றைய தினம் சட்டவிரோதமாக கூட்டம் கூடவோ, ஊர்வலம் நடத்தவோ, போராட்டம் நடத்தவோ முடியாது என நுகேகொட நீதவான் நீதிமன்று இன்று காலை உத்தரவு பிறப்பித்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அருகில் இன்று சஜித் பிரேமதாச அணியினர் ஆதரவாளர்களுடன் 'எங்களது கட்சியை நாங்கள் பாதுகாப்போம்' என்ற தொனிப் பொருளில் சத்தியக் கிரக போராட்டம் நடத்தவிருந்த நிலையிலேயே மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது

மறுபுறத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் பங்கு கொள்ள வரும் எந்தவொரு கட்சி உறுப்பினர்களையும் எவராலும் தடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து சத்தியக் கிரக போராட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இடமாற்றப்பட்டது. அங்கு சத்தியக் கிரகத்தின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது அதில் பாராளுமன்ற உறுப்பனர்களான சஜித் பிரேமதாச, தயாசிறி விஜேசேகர, புத்திக பத்திரண , ரோசி சேனாநாயக்க , சுஜீவ சேரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்த்தர்கள் ,உட்பட பெரும் எண்ணிக்கையான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டதுடன் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். பேரணி காரணமாக விகாரமகாதேவி பூங்காவை சுற்றியுள்ள வீதிகளில் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தின் முன்பாக வந்தவர்கள் அங்கு எதிர்கட்சித் தலைவருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர. பேரணியில் கலந்து கொண்டோர் கட்சிக்கு விசுவாசம் தெரிவிக்கும் வகையில் சத்தியப் பிரமாணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த அமைந்துள்ள வீதியை சுற்றி இன்று வீதிப்புனரமைப்பு வேலை திடீரென ஆரம்பமானது. 'மகநெகும' திட்டத்தின் கீழ் இந்த வீதிப்புனரமைப்பு வேலை இடம்பெற்றது. இதன் காரணமாக காலை முதல் சிறிகொத்தவுக்கு முன்பாக உள்ள வீதி முடப்பட்டதுடன் வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இன்று மாலை முன்னர் திட்டமிட்டபடி சிறிகொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்குழு உறுப்பனர்களும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க கட்சியின் நிறைவேற்றுக் குழு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளமை தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவராக கரு ஜயசூரிய இன்று தெரிவு செய்யப்படுவார் என்று கட்சி ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந் நிலையில் கட்சியின் உட்கட்சி பூசல் சந்திக்கு வந்ததையே காணக்கிடைத்தது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து இடம் பெற்று வரும் தேர்தலகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது. இதன் காரணமாக கட்சி தலைமையில் மாற்றம் தேவை என நீண்ட காலமாகவே கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் பெரும்பாலான ஆதரவாளர்களும் விருப்பம் கொண்டுள்ளனர்.

கட்சியின் தலைலைமை பதவிக்கு சஜித் பிரேமதாசவை கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் கட்சியின் தலைமை பதவிக்கு பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை சஜித் பிரேமதாச அணயினர் பிரேரித்தனர்.

இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக கரு ஜயசூரியவை பிரேரித்து புதிய தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலை வெற்றி கொள்ள பலரும் எதிர்பார்திருந்தனர்.

இதேவேளை, இன்று இடம் பெற்ற சில சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்து. சிறிகொத்த முன்பாக இன்று திடீரென்று இடம் பெற்ற வீதியை கார்பட் செய்யும் வேலை ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காகவே அரசாங்கம் மேற் கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்க பத்திரிகையாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அது போல் மகிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரம சிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை இருப்பதாகவும் அதனை தான் இன்று பகிரங்கமாக குறிப்பிடுவதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றும் போது குறிப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் முன்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக எவராவது ஒன்று கூடினால் அவர்களை துரத்தும் செயற்றிறன் தம்மிடம் இருப்பதாக பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சர் மேர்வின் சில்வா கம்பஹாவில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்;கள் இன்று இடம் பெற்ற நிகழ்வுகளைப் பார்த்து கவலையும் குழப்பமும் அடைந்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com