எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் மீது விசாரணை துவங்கியது
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முபாரக் மீது தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கொல்ல சதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது. இதில் அவரை ஆஜர்படுத்துவதற்காக அவர் ஷர்ம் அல் ஷேக் நகர விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கெய்ரோவுக்கு கொண்டு வரப்பட்டார். முன்னதாக ஷர்ம் அல் ஷேக் நகர ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஆம்புலன்சில் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டார்.
கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து அவர் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார். கோர்ட் வளாகத்திற்கு வெளியே, முபாரக்கின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். "முபாரக்கிற்குத் தண்டனை விதித்தால் கோர்ட்டையும் சிறைச்சாலையையும் கொளுத்துவோம்" என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. விசாரணையை தேசிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த விசாரணையை ஆர்வத்துடனும், நம்ப முடியாமலும் பார்த்தனர்.
"ஸ்ட்ரெச்சரில்" வெள்ளை உடையில் படுக்க வைக்கப்பட்டிருந்த முபாரக், கோர்ட்டின் கூண்டுக்குள் வைக்கப்பட்டார். அருகில் இருந்த மற்றொரு கூண்டில் அலா மற்றும் கமால் நிறுத்தப்பட்டனர். நீதிபதி அகமது ரிபாத், போலீசாரை ஏவி மக்களைக் கொன்றதாக முபாரக் மீதான குற்றச்சாட்டை வாசித்தார். அப்போது,"என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன்" என்று முபாரக் தெரிவித்தார். தொடர்ந்து, அவரது மகன்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து நீதிபதி இம்மாதம் 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். போலீஸ் அகடமியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முபாரக் காவலில் வைக்கப்பட்டார். முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால், அவருக்கு 30 ஆண்டுகள் அல்லது மரண தண்டனை கிடைக்கும்.
0 comments :
Post a Comment