Monday, August 15, 2011

இந்திய அரசு கருதினால் மாத்திரமே ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கலாம்.

இந்திய அரசும், நீதிமன்றமும் கருதினால் மாத்திரமே ராஜீவ் காந்தி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட முடியும் என வழக்கு விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைவரான டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் 21 ஆம் திகதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இந்த.வழக்கை விசாரிக்க காவல்துறையின் மூத்த அதிகாரியாக இருந்த டி.ஆர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளை இடம்பெற்று வந்தன.
வழக்கு விசாரணை பல்வேறு மட்டங்களை கடந்து, இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, சிறப்பு நீதிமன்றம் ஒன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், அதனை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்யப்பட்ட போது நான்கு பேருக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நளினியின் மரண தண்டனை பின்னர் ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏனைய மூன்று பேரின் தண்டணையும் உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் அளித்த கருணை மனுவும் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் விசாரணைகளில் குறைபாடுகள் இருப்பதாக சிலரால் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தாங்கள் இந்திய சட்டப்படி விசாரித்து, சாட்சியங்களை சேகரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பைக் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த குழுவின் தலைவரான டி.ஆர்.கார்த்திகேயன் மறுவிசாரணை தொடர்பாக இந்திய அரசோ, நீதிமன்றமோ தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment