Tuesday, August 16, 2011

ஐ.தே.க யின் செயற்குழு நாளை கூடும் சமநேரத்தில் தலைமைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை புதன் கிழமை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ள நிலையில் சிறிகொத்தவுக்கு அருகில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை சஜித் பிரேமதாச அணியினர் ஏற்பாடு செய்துதுள்ளனர்.

இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் பெரும் பரபரப்பாக அமையும் எனவும் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்ளை தெரிவு செய்யும் குழுவும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பான குழுவும் நியமிக்கப்படவுள்ளது.

அத்தோடு எதிர்வரும் 23 ,24 ஆம் திகதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஐ தே.க,வின் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்குமாறு வலியுறுத்தி சஜித் பிரேமதாச அணியினர் பெரும் ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்டணம் செலுத்தப்பட்டு சில தொலைக்காட்சி அலைவரிசைகளில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச அணியினர் கரு ஜயசூரியவை கட்சித் தலைவராக்கவேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் நாளை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்கவேண்டும் என்று சஜித் பிரேமதாச அணியினர் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக தெரிகிறது.

செயற்குழுக் கூட்டம் பிரச்சினையில் முடிந்தால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்ளை தெரிவு செய்வது தொடர்பாக சிக்கல் ஏற்படலாம் இதன் காரணமாக எமது கட்சி தோல்வி அடையாத கொழும்பு மாநகர சபையை எதிர் கட்சிக்கு தாரைவார்க்க நேரிடலாம் என்று எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் ஆலோசகராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்துக் கொண்டு தலைவர் பதவியை கரு ஜயசூரியவுக்கு வழங்க வேண்டும்.

இதன் மூலமாகவே நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற முடியும் என்று முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment