புலனாய்வுக் கட்டமைப்பு உஷார்நிலையில் இருக்க வேண்டும் என்கிறார் கோத்தா.
வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்பை உஷார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த முப்பதாண்டு காலமாக இலங்கை பயங்கரவாதப் போரினால் பீடிக்கப்பட்டிருந்தது. இராணுவம் பாரியளவிலான பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுத்தது. இருந்தும் பயங்கரவாதப் போரினால் நாம் இழந்தது அதிகமாகும். இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்து கொண்டு நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது.
இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. பொருளாதார அரசியல் மற்றும் கலாசாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினர் செயற்பட்டு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
யுத்தகாலப்பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை மீண்டும் நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுக்க வேண்டியது படையினரின் பொறுப்பும் கடமையாகும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அதற்கு முன்னரும் புலிகள் கடல் மார்க்கமாக தமக்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் உள்நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தயாரிக்கவில்லை. கடற்படையினர் விசேட நடவடிக்கைகளின் ஊடாக புலிகளின் கடல் மார்க்கமான ஆயுதக் கொள்வனவை இல்லாதொழித்தனர்.
இதனை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் பயங்கரவாதிகளினால் நாட்டிற்குள் ஆயுதங்கள் கொண்டு வருவதை தடுக்கவேண்டும்.
பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு நிலப்பரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாரியளவிலான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இப்பணிகளில் இராணுவம் பங்களிப்புக்களை செய்து வருகின்றது. அது மட்டுமன்றி ஐ.நா. உட்பட பல நாடுகளுக்கு இராணுவம் சார் பிரதிநிதிகள் தூதுவர்களாக சென்றுள்ளனர் என்றார்.
0 comments :
Post a Comment